நித்திரவிளை, செப்.3: கொல்லங்கோடு அருகே காட்டுக்கடை பகுதியை சேர்ந்தவர் ஹாரின் தாஸ் (26). ஏசி மெக்கானிக். திருமணம் ஆகவில்லை. இவர் வீட்டு தேவைக்கு தெற்கே பாலவிளை அருகே காவுவிளை என்னுமிடத்தில் ஒரு அயனிமரம் வாங்கியுள்ளார். அதை வெட்டுவதற்கு நேற்று காலை 11 மணியளவில் பணியாட்களுடன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் நின்ற தென்னை மரத்தில் கட்டியிருந்த இரும்பு கம்பி, அயனி மரத்தை முறிக்க இடையூறாக இருந்துள்ளது. அந்த இரும்பு கம்பியை ஹாரின் தாஸ் கழட்டி கையில் பிடித்து கொண்டு நடந்து சென்றுள்ளார். அப்போது மேல் பகுதி வழியாக சென்ற உயர் அழுத்த மின்கம்பியில், ஹாரின் தாஸ் கையில் இருந்த இரும்பு கம்பி உரசி உள்ளது. இதில் மின்சாரம் பாய்ந்து ஹாரின் தாஸ் தூக்கி வீசப்பட்டார். உடன் நின்றவர்கள் அவரை மீட்டு, குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர், ஹாரின் தாஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். இது சம்பந்தமாக ஹாரின் தாஸ் அண்ணன் ஜோபின் கொடுத்த புகார் மீது கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மின்சாரம் தாக்கியதில் ஏசி மெக்கானிக் இறந்த சம்பவம் காட்டுக்கடை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.