மதுரை, ஆக. 24: கொல்காத்தாவில் பெண் டாக்டர் கொலையை கண்டித்து, எஸ்எப்ஐ சார்பில் மதுரையில் கையெழுத்து இயக்கம் நடந்தது. மேற்க வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்த பெண் பயிற்சி டாக்டர் கடந்த 9ம் தேதி இரவு பணியின் போது பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து, நாடு முழுவதும் டாக்டர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்கள் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, மதுரை மருத்துவக் கல்லூரி வளாகம் முன்பு, எஸ்எப்ஐ சார்பில் நேற்று கையெழுத்து இயக்கம் நடந்தது.
அதில், எஸ்எப்ஐ சார்பில் மத்திய குழு உறுப்பினர் பிருந்தா, மாவட்ட தலைவர் டேவிட், செயலாளர் பாலா உட்பட 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இக்கையெழுத்து இயக்கத்தை துணை மேயர் நாகராஜன் துவக்கி வைத்தார். தொடர்ந்து, வடக்கு மண்டல தலைவர் சரவண புவனேஸ்வரி, எஸ்எப்ஐ அமைப்பின் மருத்துவ கல்லூரி கிளை செயலாளர் முபாஷிர் உட்பட, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டனர். அதில், பெண் டாக்டர் கொலைக்கு உரிய நீதி வழங்கவும், பெண் டாக்டர்களின் பாதுகாப்புக்கென தனிசட்டமும், பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான தனிசட்டமும் இயற்ற ஒன்றிய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.