போடி, ஜூலை 4: போடி முந்தல் சாலையில் அரசு உதவிபெறும் ஏல விவசாயிகள் சங்க கல்லூரி உள்ளது. இக்கல்லூரி முதல்வர் சிவக்குமார். போடி திருமலாபுரம், குப்பளகிரி தோட்டத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் இக்கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்துள்ளார். இந்நிலையில் சரவணன் நேற்று முன் தினம் கல்லூரிக்கு வந்து அலுவலக ஊழியரிடம் தனது மகனின் மதிப்பெண் பட்டியலை தருமாறு கேட்டுள்ளார். ஆனால், உங்களது மகன் நேரில் வந்தால்தான் கொடுக்க முடியும் என்று அலுவலர் கூறியுள்ளார்.
இதையடுத்து சரவணன் கல்லூரி முதல்வர் அறைக்குள் அத்துமீறி நுழைந்து சான்றிதழ் கேட்டு அவரை ஆபாசமாக பேசி தகராறு செய்தார். மேலும், தனது மகனுக்கு போன் செய்து, முதல்வரிடம் பேச வைத்ததில், அவரை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார். பின்னர், சரவணன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து கல்லூரி முதல்வர் சிவக்குமார் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். எஸ்ஐ கிருஷ்ணவேணி இதுதொடர்பாக தந்தை, மகன் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.