கோவை, அக்.17: தமிழ்நாடு மேற்கு மண்டலத்தில் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களை போலீஸ் அதிகாரிகளுக்கான புலனாய்வு, குற்றம் தடுப்பு பயிற்சி வகுப்பு நேற்று துவங்கியது. கோவை பணியிடை பயிற்சி மையத்தில் நேற்று இந்த பயிற்சியை மண்டல ஐஜி பவானீஸ்வரி துவக்கி வைத்தார். இதில் கோவை சரக டிஐஜி சரவணசுந்தர், மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமும் 4 பேட்ச் என 5 நாளுக்கு பயிற்சி வழங்கப்படும். மண்டல அளவில், சுமார் 400 போலீசார் இதில் பயிற்சி பெறுவார்கள். இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இது தொடர்பாக ஐஜி பவானீஸ்வரி கூறுகையில், ‘‘கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்ற வழக்குகள் மற்றும் பல்வேறு முக்கிய வழக்குகளில் விசாரணை நுணுக்கம், சட்டம், புலனாய்வு தகவல்களை போலீசார் தெரிந்து கொள்ள இந்த பயிற்சி வழங்கப்படுகிறது.
நவீன புலனாய்வு யுக்திகள், குற்றவியல் நடைமுறைகள், குற்றம் சட்டப்பட்டவர்களை பிடிக்க மேற்ெகாள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கப்படுகிறது. பணி ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள், வழக்கறிஞர்கள் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. சிறப்பான பயிற்சியின் மூலமாக போலீசார் இன்னும் சிறப்பாக பணியாற்ற முடியும். வழக்குகளில் தீவிரமாக விசாரணை நடத்தி விரைவாக நடவடிக்கை எடுக்க முடியும். ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் தரும் ஆலோசனைகள், பயிற்சிகள் தற்போது பணியாற்றும் போலீசாருக்கு உதவிகரமாக இருக்கும்’’ என்றார்.