கழுகுமலை: கழுகுமலை அருகே கொரோனா பாதிப்பு காரணமாக மனைவியை மருத்துவமனையில் இருந்து அனுப்ப மறுத்ததால் செல்போன் டவரில் ஏறி தொழிலாளி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கழுகுமலை அருகேயுள்ள கரடிகுளத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முத்துபாண்டி(38). இவரது மனைவி இசைசெல்வி(23). இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த 8 நாட்களுக்கு முன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் இசைசெல்விக்கு 2வது பெண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதனால், அவரை வீட்டுக்கு அனுப்ப மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது.நாங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்கிறோம் என முத்துபாண்டி மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். அதற்கு மருத்துவர்கள், கழுகுமலை சுகாதார ஆய்வாளரிடம் தெரிவித்தால், உங்கள் வீட்டை பார்வையிட்டு, கொரோனா பாதிப்புள்ளவர்கள் தனிமைப்படுத்தி உள்ளது என பரிந்துரை கடிதம் தருவார்கள். அதனை கொண்டு வந்தால், நாங்கள் அனுப்புகிறோம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், முத்துபாண்டியின் வீட்டில் கொரோனா பாதித்தவர்களை தனிமைப்படுத்திக் கொள்ள வசதி இல்லை. இதனால் அவரால் பரிந்துரை கடிதம் பெறமுடியவில்லை. மனைவியும், குழந்தையும் தனியாக மருத்துவமனையில் உள்ளதால், சோகமடைந்த முத்துபாண்டி நேற்று காலை கரடிகுளம் அருகேயுள்ள செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.தகவலறிந்து, கழுகுமலை எஸ்ஐ அந்தோணி திலீப் மற்றும் போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். சங்கரன்கோவிலில் இருந்து தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயராஜ் தலைமையில் வீரர் வந்தனர். தொடர்ந்து சுகாதார அலுவலர்கள் வரவழைக்கப்பட்டு, பரிந்துரை கடிதம் தருவதாக ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 3 மணி நேர போராட்டதுக்கு பிறகு முத்துப்பாண்டி, டவரை விட்டு கீழே இறங்கினார். அவரிடம் இசைசெல்வியை தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் என்று மருத்துவ குழுவினருக்கு உத்தரவாதத்துடன் பரிந்துரை கடிதம் வழங்கப்பட்டது. இதுகுறித்து கழுகுமலை போலீசார் முத்துபாண்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது….