புதுடெல்லி : கொரோனா தடுப்பூசியின் விலையை அதன் தயாரிப்பு நிறுவனங்கள் நிர்ணயம் செய்யக் கூடாது என அதிரடி உத்தரவை பிறப்பித்த உச்ச நீதிமன்றம், இருக்கும் சூழலை கருத்தில் கொண்டு கூடுதலாக தடுப்பூசிகளை உருவாக்க வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.ஆக்சிஜன், மருந்துகள், மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், தடுப்பூசி தட்டுப்பாடு ஆகியவற்றின் அவசியங்கள் குறித்து தாமாக முன்வந்து பதிவு செய்யப்பட்ட வழக்கானது, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் சந்திரசூட், நாகேஸ்வரராவ் மற்றும் நவீந்தர் பட் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,’ தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதேப்போன்று மாநிலங்களே தடுப்பூசியை நேரடியாக கொள்முதல் செய்யும்போது ஏழை, வசதி படைத்தவர்கள் என்ற பாரபட்சம் இல்லாமல் அனைவருக்கும் சமமாக கிடைப்பது பற்றியும் உறுதி செய்ய வேண்டும்.அதேப்போல் புதிய வகை கொரோனா பாதிப்பு குறித்து ஆர்.டி.பி.சி.ஆர் மூலம் கண்டறிய முடியுமா? அல்லது அதற்கு ஏதேனும் வேறு விதமான வழிமுறைகாள் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். புதிய வகை கொரோனாவை கண்டறிய என்ன விதமான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறீர்கள் என மத்திய அரசுக்கு சரமாரி கேள்வியெழுப்பிய நீதிபதிகள்,’கொரோனா தடுப்பூசி விவகாரம் அனைத்தும் மத்திய அரசின் வசம் தான் இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தேசிய அளவிலான தடுப்பு திட்டத்தை செயல்படுத்த முன்வர வேண்டும். நாட்டில் உள்ளஅனைத்து குடிமக்களுக்கும் பாகுபாடு இல்லாமல் இலவசமாக தடுப்பூசி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் கருணை அடிப்படையில் அதனை விநியோகம் செய்வதை நிறுத்தி, அதனை மத்திய அரசு மேற்கொள்ள முன்வர வேண்டும். தடுப்பூசி வினியோகத் திட்டத்தின் கட்டுப்பாடு மத்திய அரசின் கையில் இருக்க வேண்டுமே தவிர இதில் மூன்றாம் நபர் தலையீடு இருக்கக் கூடாது. அதேப்போன்று கொரோனா தடுப்பூசிக்கான விலையை தயாரிப்பு நிறுவனங்கள் மேற்கொள்வதோ அல்லது அதனை நிர்ணயம் செய்வதையோ அனுமதிக்க முடியாது. ஏனெனில் தனியார் நிறுவனங்கள் இதனை மேற்கொள்ளும் பொழுது அதில் சமநிலைத் தன்மை இருக்கும் என்பதை நாம் எப்படி எதிர்பார்க்க முடியும். அதில் சாத்தியமே இல்லை. இதைத்தவிர தடுப்பூசி, மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து சமூக வலைதளத்தில் உதவி கேட்டு பதிடுவோர்கள் மீது மத்திய மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கக்கூடாது. இதுகுறித்து அனைத்து மாநில காவல்துறை டிஜிபிக்களுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது. மீறினால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கையை நீதிமன்றம் மேற்கொள்ளும் என நீதிபதிகள் எச்சரிக்கையோடு கூடிய உத்தரவை பிறப்பித்தனர்….