புதுச்சேரி, டிச. 28: புதுச்சேரியில் பல மாதங்களுக்கு பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டு கூலித்தொழிலாளி உயிரிழந்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன், ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மண்சுவிக் மண்டாவியா ஆலோசனை நடத்தினார். மாநிலங்களில் கொரோனா பரவலை கண்காணிக்கும் வகையில் பரிசோதனைகளை அதிகரிக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும் திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடும்போது, அதனை பின்பற்றுமாறு அறிவுறுத்தினார். இதற்கிடையே பல மாதங்களுக்கு பிறகு புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட குபேர் நகரை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி கோவிந்த்(58).
இவருக்கு கால் முறிவு ஏற்பட்ட நிலையில் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் கடந்த 19ம் தேதி அனுமதிக்கப்பட்டார். கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென உயிரிழந்தார், அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உயிரிழந்த கோவிந்த் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு வயது மூப்பு காரணமாக பல்வேறு இணை நோய்கள் உள்ளதால் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா தொற்றால் இதுவரையும் 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் குணமடைந்த நிலையில் தற்போது 6 பேர் மட்டும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் யாரும் சிகிச்சையில் இல்லை என சுகதாரத்துறை இயக்குனர் ராமலு தெரிவித்துள்ளார்.