ஊட்டி, ஜூன் 18: ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமை வகித்தார். கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து வீட்டு மனை பட்டா, முதியோர் தொகை, விதவை தொகை, கல்வி உதவித்தொகை, வங்கி கடன், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 132 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். வாரம் தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, நீலகிரி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகளின் கீழ் செயல்படும் நியாய விலைக்கடையில் விற்பனையாளராக பணிபுரிந்த ராமசாமி என்பவர் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, அவரது மனைவி பார்வதிக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து, ரூ.25 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு வழங்கினார். இக்கூட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) பழனிச்சாமி, சமூக பாதுகாப்புத் திட்ட (தனித்துணை ஆட்சியர்) ராதாகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் சுரேஷ் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.