ராசிபுரம், ஜூன் 23: ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் நண்பகல் நேரத்தில், ெபாதுமக்கள் வெளியே செல்வதை தவிர்த்து வீடுகளில் முடங்கினர். இந்நிலையில், நேற்று காலை முதல் அதிக வெயில் வாட்டியது. இதனால் சாலைகளில் வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. அனல் காற்று வீசிய நிலையில், மாலை 4 மணிக்கு மேல் மேகமூட்டம் தென்பட்டு, சூறாவளி காற்று வீசத் தொடங்கியது. சிறிது நேரத்தில் சாரல் மழை துவங்கி அரைமணி நேரம் கொட்டி தீர்த்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து சென்றது. வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றனர். காலை முதல் வெயில் வாட்டிய நிலையில், மாலையில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.