மேலூர், ஜூன் 5: மேலூர் அருகே கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் வளர்ச்சித்திட்டங்கள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள் அளித்த அறிக்கை தொடர்பாக எம்பி மற்றும் கூடுதல் கலெக்டர் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் ஒன்றிய மற்றும் மாநில அரசின் நிதி உதவியுடன் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இந்த பணிகள் குறித்து, அனைத்து துறை அலுவலர்களின் முன்னேற்ற அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வளர்ச்சி பணிகள் மற்றும் அவற்றின் மீதான அறிக்கை குறித்த ஆய்வு கூட்டம், கொட்டாம்பட்டியில் நேற்று நடைபெற்றது. கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா தலைமையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இவற்றை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் செயற்பொறியாளர் (வளர்ச்சி) இந்திராணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்லப்பாண்டியன், சங்கர் கைலாசம், மேலூர் தாசில்தார் செந்தாமரை மற்றும் குடிநீர் வாரியம், சுகாதார துறை, மின்சார துறை, வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவர்களுடன் கிராம ஊராட்சி செயலாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட பல்வேறு துறை சார்ந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஆய்வு கூட்டத்திற்கு பிறகு கொட்டாம்பட்டியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பஸ் ஸ்டாண்டை எம்பி வெங்கடேசன், கூடுதல் கலெக்டர் மற்றும் பிடிஓக்கள் பார்வையிட்டனர்.