நிலக்கோட்டை, ஆக. 26: கொடைரோடு அருகே காமலாபுரத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சரிவர குடிதண்ணீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து ஜம்புதுரைகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அதிகாரியிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என தெரிகிறது.
இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதிமக்கள், நேற்று முன்தினம் மாலை 7 மணியளவில் காலி குடங்களுடன் மதுரை- பழநி சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த அம்மையநாயக்கனூர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.