கொடைக்கானல், நவ. 8: கொடைக்கானல் சுற்றுலா நகரமாக உள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்து செல்கின்றனர். கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் தாங்கள் ரசிக்கும் இடங்களில் குப்பைகளை கொட்டுவது குறிப்பாக பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டுவது வாடிக்கையாகி வருகிறது. கொடைக்கானல் அருகே உள்ள சிட்டி வியூ வனப்பகுதியில் வீசப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை கொடைக்கானல் பள்ளி மாணவ, மாணவிகள், மற்றும் சோலை குருவிகள் தன்னார்வ அமைப்பினர் அகற்றினர்.
மாதந்தோறும் அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறை இவர்கள் இணைந்து வனப்பகுதியை தூய்மை செய்து வருகின்றனர். நேற்று சிட்டி வியூ வனப்பகுதியில் தூய்மை பணியை மேற்கொண்ட இவர்கள் அந்த பகுதியில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மது பாட்டில்கள் உள்ளிட்டவற்றை அகற்றினர். தாங்கள் அகற்றிய கழிவுகளைக் கொண்டு அழகிய உருவங்களையும் அமைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.