கொடைக்கானல், ஜூன் 18: கொடைக்கானல் பெருமாள் மலை பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையை சீரமைக்க புதிய மின்மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மேத்யூ ெதரிவித்தார். கொடைக்கானல் நுழைவு பகுதியில் அமைந்துள்ளது பெருமாள் மலை. இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் மின் விநியோகத்திற்கு இப்பகுதியில் ஒரு மின்மாற்றி உள்ளது. 100 கிலோ வாட் சக்தி கொண்ட இந்த மின்மாற்றியில் அடிக்கடி பழுது ஏற்பட்டு மின்சாரம் தடைபட்டது.
இதனால் இப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த மின்மாற்றி பழுதடைந்தது. பின்னர் சரிசெய்யப்பட்ட நிலையில் மீண்டும் பழுதாகி மின்தடை ஏற்பட்டது. இந்நிலையில் இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று புதிய மின் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கொடைக்கானல் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் மேத்யூ கூறியதாவது:
பெருமாள் மலை பகுதியில் ஏற்படும் மின் தட்டுப்பாட்டை சீரமைப்பதற்கு ஏற்கனவே 100 கிலோ வாட் மின்மாற்றி உள்ளது. இரவோடு இரவாக இந்த மின்மாற்றி சீரமைக்கப்பட்டு தற்போது மின் விநியோகம் சீராக உள்ளது. எனினும் இப்பகுதியின் கூடுதல் மின் தேவைக்கு ஏற்ப புதிய மின்மாற்றி ஒன்று அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய மின்மாற்றியும் 100 கிலோ வாட் சக்தி கொண்டதாக அமைக்கப்படும் இவ்வாறு கூறினார்.