கொடைக்கானல், மார்ச் 5:கொடைக்கானல் நகரின் மைய பகுதியில் பிரையண்ட் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் நடக்கும் கோடை விழாவை முன்னிட்டு மலர் கண்காட்சி நடைபெறும். இந்த ஆண்டு கோடை விழா மற்றும் 62வது மலர் கண்காட்சி நடைபெறவுள்ளது. இதையொட்டி பூங்காவில் மூன்று கட்டமாக மலர் நாற்றுகள் நடும் பணி நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில் பூங்காவின் மலர் படுகைகளில் உள்ள 726 வகையான ரோஜா செடிகளுக்கு கவாத்து செய்யும் பணிகள் நேற்று முதல் துவங்கி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்த பின்னர் அடுத்த 45 நாட்களுக்குள் ரோஜா பூக்கள் பூத்து குலுங்கும். குறிப்பாக ஏப்ரல் 15 முதல் மே மாதம் முழுவதும் பல்வேறு வண்ணங்களில் ரோஜா பூக்கள் பூத்து குலுங்கும். மேலும் வரும் வாரம் முழுவதும் இந்த பணிகள் தொடர்ந்து நடைபெறும். இத்தகவலை பிரையண்ட் பூங்கா மேலாளர் சிவபாலன் தெரிவித்தார்.