கொடைக்கானல், ஜூன் 16: திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வழக்கமாக மருத்துவ முகாம் திண்டுக்கல் பகுதியில் நடைபெறும். இதில் கொடைக்கானல் மேல்மலை மற்றும் கீழ்மலை பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி 100 கிலோ மீட்டர் தொலைவிற்கு பயணித்து கலந்து கொள்ள வேண்டும்.
எனவே கொடைக்கானலை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இங்கேயே மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட கலெக்டர், கொடைக்கானலிலே மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாமை நடத்த உத்தரவிட்டார். இதன்படி கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. ஆர்டிஓ சிவராமன் தலைமை வகித்தார்.
இம்முகாமில் கொடைக்கானல் மேல்மலை மற்றும் கீழ்மலை கிராமங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான அரசின் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, பஸ் பாஸ், ரயில் பாஸ் கோரி விண்ணப்பம் செய்தனர். தொடர்ந்து ஏற்கனவே விண்ணப்பம் செய்தவர்களுக்கு பரிசீலனை முடிந்து அடையாள அட்டை, பஸ் பாஸ், ரயில் பாஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இதில் வட்டாட்சியர் பாபு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேல் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.