கொடைக்கானல், நவ. 18: கொடைக்கானல் மலைக்கிராமங்களில் விளையும் கேரட்டிற்கு சந்தையில் உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கொடைக்கானலில் மேல்மலை மற்றும் கீழ்மலை பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு கேரட் அதிகளவில் பயிரிடப்படுகிறது. கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த 3 மாதங்களில் பெய்த மழை காரணமாக வில்பட்டி, பள்ளங்கி, அட்டுவம்பட்டி, மாட்டுப்பட்டி, வாழைக்காட்டு ஓடை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் தற்போது கேரட் அறுவடை பணிகள் துவங்கி உள்ளது.
ஆனால் சந்தையில் கொடைக்கானல் கேரட்டிற்கு விலை குறைந்துள்ளதாகவும், ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.12 வரை மட்டுமே விலை போவதாகவும் மலை கிராம விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். உரிய விலை இல்லாமல் இருப்பதால் சில விவசாயிகள் கேரட்டை அறுவடை செய்யாமல் இருந்து வருகின்றனர். எனவே தோட்டக்கலை துறையினர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கேரட் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.