கொடைக்கானல்: கொடைக்கானல் கீழ்மலை கிராமம் தாண்டிக்குடியில் சாலையோரம் சிதிலமடைந்து காணப்படும் பழங்கால கல்வெட்டை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொடைக்கானல் கீழ்மலை கிராமம் தாண்டிக்குடி. இவ்வூரின் சாலையோரம் பழங்கால கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது.
இதிலுள்ள எழுத்துகளில் பெரும்பாலானவை சிதிலமடைந்து காணப்படுகின்றன. சில எழுத்துகள் மட்டும் நன்றாக தெரிகின்றன. இந்த பழங்கால கல்வெட்டு உரிய பராமரிப்பின்றி உள்ளது. மேலும் இதனருகே குப்பைகளை குவித்து வைத்துள்ளனர். எனவே, தொல்லியல் துறையினர் இந்த கல்வெட்டை ஆய்வு செய்து அதிலுள்ள அரிய தகவல்களை சேகரிக்க வேண்டும் என்றும், கல்வெட்டை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.