கொடைக்கானல், நவ. 10: கொடைக்கானல் முக்கிய சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர். கொடைக்கானலில் பெரும்பாலான இடங்கள் வனப்பகுதியாக உள்ளது. வனவிலங்குகளும் அதிகம் வசித்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் மட்டுமின்றி அரசு மற்றும் தனியார் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பொருத்தி வைத்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கும், வனவிலங்குகளுக்கும் பெரும் இடையூறு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதனை தடுக்கும் விதமாக நேற்று கொடைக்கானல் பஸ் நிலையத்தில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 2 அரசு பஸ்களில் அதிக சத்தம் எழுப்பும் ஏர் ஹாரன்கள் பொருத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து, 2 அரசு பஸ்களுக்கு தலா ரூ.10,000 வீதம் என ரூ.20,000 அபராதம் விதித்தனர். மேலும் இனி அதிக சத்தம் எழுப்பும் ஏர் ஹாரன்கள் பயன்படுத்த கூடாது எனவும், பயன்படுத்துவது தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.