கொடைக்கானல், ஆக. 28: மயிலாடுதுறையை சேர்ந்தவர் ரவி (56). இவர், கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று முன்தினம் மாலை கொடைக்கானலில் இருந்து புதுக்கோட்டைக்கு அரசு பஸ்சை ஓட்டி சென்றார். பஸ்சில் கண்டக்டராக திருப்பதி என்பவர் இருந்தார். கொடைக்கானல் அருகே செண்பகனூர் பகுதியில் சென்ற போது டூவீலரில் வந்த மதுரையை சேர்ந்த சிக்கந்தர் மகன்கள் ஷேக் முகமது (22), பாசித் (19) ஆகியோர் பஸ்சை வழிமறித்து டிரைவர் ரவியிடம் தகராறு செய்தனர்.
பின்னர் ‘பஸ்சை ஒழுங்காக ஓட்ட மாட்டாயா’ என மிரட்டி இருவரும் திடீரென ரவியை தாக்கினர். இதை தடுக்க முயன்ற கண்டக்டர் திருப்பதி மற்றும் பயணி ராஜசேகர் என்பவரையும் தாக்கினர். இதில் மூவரும் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து ரவி அளித்த புகாரின் பேரில் கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிந்து ஷேக் முகமது, பாசித் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.