விருதுநகர், செப்.6: விருதுநகர் மீனாட்சி உடனுறை சொக்கநாதர் கோவில் ஆவணித் திருவிழா நேற்று துவங்கியது. விருதுநகர் மேலரதவீதியில் சுமார் 800 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் உள்ளது. இங்கு மீனாட்சி உடனுறை சொக்கநாதர் அருள்பாலிக்கிறார்.
இக்கோவில் 55வது ஆண்டு ஆவணித் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இம்மாதம் 16ம் தேதி திருவிழா முடிவடைகிறது. திருவிழாவையொட்டி தினமும் சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் நடைபெறும்.
சொக்கநாதர் சாமி மீனாட்சி அம்மனுடன் பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளிப்பர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் 12ம் தேதி நடைபெறுகிறது.