கோவை, ஜன. 25: தமிழ்நாடு அரசு சார்பில், முன்னாள் படைவீரர்களுக்கு உதவும் வகையில் ஆண்டுதோறும் கொடிநாள் வசூல் நடத்தப்படுகிறது. அந்தந்த மாவட்ட கலெக்டர் தலைமையில், அரசுத்துறையினர் பொதுமக்களிடம் கொடிநாள் வசூல் செய்து, அந்த தொகையை மாவட்ட கலெக்டர் மூலமாக அரசுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
அந்த வகையில், 2024-ம் ஆண்டுக்கான கொடி நாள் வசூலில் கோவை மாநகராட்சி ரூ.74 லட்சம் வசூல் செய்து, மாநில அளவில் நிர்ணயித்த இலக்கை தாண்டியது. இதன்மூலம், மாநில அரசின் விருதுக்கு, கோவை மாநகராட்சி தேர்வாகியுள்ளது. நாளை (ஞாயிறு) குடியரசு தினத்தன்று சென்னையில் கவர்னர் மாளிகையில் நடைபெறும் விழாவில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, இந்த விருதை வழங்குகிறார். முந்தைய ஆண்டும், கொடிநாள் வசூலில் கோவை மாநகராட்சி முதலிடம் பெற்று, விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது.