கோவை கொடிசியா மைதானத்தில் அண்டர் வாட்டர் டனல் டபுள் டக்கர் அக்வாரியம் கண்காட்சி நடந்து வருகிறது. இக்கண்காட்சியின் முகப்பில் பிரமாண்டமான ஆக்டோபஸ் உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழியாக அரங்கிற்குள் நுழைந்தவுடன் லவ் பேர்ட்ஸ் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட பறவைகள் பறந்து கொண்டிருக்கும். இது ஒரு பறவைகளின் சரணாலயத்திற்குள் சென்ற அனுபவத்தை நமக்கு அளிக்கிறது. இப்பகுதியில் பொதுமக்கள், குழந்தைகளை கவரும் வகையில் வெள்ளை நிறத்திலான வெளிநாட்டு வகை பாம்பு ஒன்று உள்ளது. இதனை பயமின்றி தோளில், கைகளில் எடுத்து குழந்தைகள், பொதுமக்கள் மகிழ்ந்து வருகின்றனர்.
தவிர, பஞ்சவர்ண கிளி, இகுவானாவும் உள்ளது. இதனுடன் குழந்தைகள், பொதுமக்கள் புகைப்படம் எடுத்து வருகின்றனர். இந்த பறவை சரணாலயத்தை கடந்து சென்றதும் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பட்டாம் பூச்சி, தேனீ ஆகியவை பூக்களில் தேனை உறிஞ்சுவது போன்று தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இவை பார்வையாளர்களை மிகவும் கவர்ந்து வருகிறது. இப்பகுதியில் 360 டிகிரி சுற்றும் மொபைல் வீடியோ எடுக்கும் வசதியுள்ளது. இதன்மூலம் பாடல்களை கேட்டு அதற்கு ஏற்ப நடமானடி வீடியோ எடுத்துக்கொள்ள முடியும். இந்த பகுதியை கடந்து சென்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெகுவாக கவரும் வகையிலான நவீன முறையில் தயாரிக்கப்பட்ட 2 ரோபோ நாய்கள் உள்ளன.
இவை தரையில் வேகமாக நடந்தும், ஓடியும், பாடலுக்கு ஏற்ப நடனமாடியும் அசத்துகிறது. இந்த ரோபோ நாய் குட்டிகளுக்கு கண்காட்சியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து எலக்ட்ரிக் மின்விளக்குடன் தயாரிக்கப்பட்ட பட்டாம்பூச்சி இருக்கை இரண்டு உள்ளது.வண்ண விளக்கு அலங்காரத்துடன் காணப்படும் இருக்கையில் அமர்ந்து ஓய்வெடுக்க முடியும். இதன் அருகே ஹாலிவுட் படமான பைரேட்ஸ் ஆப் தி கரிபியன் போன்ற பெரிய அளவிலான பாய் மர படகு அனைவரையும் கருவம் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை கடந்து சென்றதும் பொதுமக்களை கவரும் வகையில் பிரமாண்ட தொட்டியில் கடல் கன்னிகள் தண்ணீருக்குள் மிதந்தவாறு சாகசம் செய்கிறார்கள்.
இந்த கடல் கன்னிகள் பிலிப்பைன் நாட்டை சேர்ந்தவர்கள். இவர்கள், தண்ணீருக்குள் இருந்தவாறு பறக்கும் முத்தம் கொடுத்து அனைவரையும் பரவசப்படுத்துகிறார்கள். இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்ப்பதுடன் செல்போனில் கடல் கன்னிகளுடன் செல்பி, வீடியோ எடுத்து மகிழ்கிறார்கள். இந்த கடல் கன்னிகளை கடந்து சென்றவுடன் சிறியது முதல் பெரியது வரை வண்ணமயமான மீன்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் இடம் பெற்றுள்ளன. 80 கிலோ எடையுள்ள மனிதனைப் போல ஆறு அடி நீளம் உள்ள மீன்களின் ராஜாவான அரபைமா மீன்களை மிக அருகில் காண முடிகிறது.
தவிர, இதுவரை பார்க்காத வகையிலான பல வகையான மீன்களை பார்க்க முடிகிறது. இந்த மீன்களை ரசித்து சிறிது தூரம் நடந்து சென்றால் மீன் சுரங்கத்தை அடையாலம். இந்த மீன் சுரங்கத்தில் மனிதர் ஒருவரும் மீனும் நீந்தி வருவது பார்வையாளர்களை கவர்கிறது. மீன் சுரங்கம் முழுவதுமாக குளிரூட்டப்பட்டதாக இருக்கிறது. பின்னர், வீட்டுக்கு தேவையான பொருட்கள், பள்ளி குழந்தைகளுக்கு தேவையான புத்தகங்கள், விளையாட்டுப் பொருட்கள் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் விளையாடி மகிழும் வெளிநாட்டு விளையாட்டு அம்சங்கள் போன்ற அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. உணவுக்கூடமும் உள்ளது.