மதுரை, நவ.18: மதுரை மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழையால் ஆங்காங்கே நீர் தேங்கி நிற்கிறது. இதில் கொசுக்கள் உருவாகி அதன்மூலம் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் கடந்த இரு வாரத்தில் மட்டும் 30 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பிற்கு ஆளாகி இருப்பதும், இதில் 1 முதல் 5 வரையிலான குழந்தைகள், 8 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்கள் பாதிப்பு இருப்பதும் தெரியவந்துள்ளது.
மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 98 பேர் காய்ச்சல் காரணமாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலருக்கு டெங்கு காய்ச்சல் குறித்து ரத்த பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநகராட்சியினருடன், சுகாதாரத்துறையினர் இணைந்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மாவட்டத்தில் உள்ள தனியார் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் ஆங்காங்கே குவித்துவைக்கப்பட்டுள்ள தேவையற்ற பொருட்களில் மழை நீர் தேங்குவதை தடுக்கும் வகையில், மாநகராட்சி தரப்பில் 80 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் ஒவ்வொரு பகுதியாக சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். குழந்தைகள், சிறுவர்களுக்கு டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படாத வகையில் கல்வி நிலையங்கள் மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளில் மருந்து தெளித்து, கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.