தஞ்சாவூர், ஆக.26: தஞ்சாவூர் விளார் ஊராட்சி இந்திராநகர் 2வது தெருவில் ஜல்லிகளை கொட்டி வைத்து இரண்டு மாதம் ஆகியும் சாலை போடாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உடனடியாக ரோடு போட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் அருகே விளார் ஊராட்சியில் அன்னை இந்திராநகர் 2வது தெருவில் சாலை போடுவதற்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு விளார் ஊராட்சி மன்ற தலைவர் அத்தெருவிற்கு சாலை போடுவதற்கு தெருவை சுத்தம் செய்து, அளவீடும் செய்தும் ரோடு போடுவதற்கு ஜல்லி இறக்கியுள்ளனர். இந்த நிலையில் இப்பகுதியினுடைய ஒன்றிய கவுன்சிலர் சாலையை நான் தான் போடுவேன் என்று கூறி சாலை முழுவதும் 300 மீட்டர் தொலைவிற்கு ஜல்லியை கொட்டி வைத்துள்ளார்.
இதனால் ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கும், ஒன்றிய கவுன்சிலருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பிறகு ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஒன்றிய கவுன்சிலரையே சாலை போட்டுக் கொள்ளுமாறு கூறிவிட்டதாக கூறப்படுகிறது. இரண்டு மாதம் ஆகியும் சாலை போடவில்லை. ஆனால் சாலை போடுவதற்கு ஜல்லிகளை தெருவில் உள்ள வீடுகளின் முன்பு கொட்டி வைத்துள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிறுவர்கள், முதியவர்கள் ஜல்லியில் தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். இத்தெருவில் வசிக்கும் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் தங்களது வீட்டிற்கு வர முடியாமல் தெருமுனையில் வாகனங்களை நிறுத்திவிட்டு நடந்து வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சாலை பிரச்சனை சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக சாலை அமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்