சென்னை: சென்னையில் கொக்கைன் விற்ற வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். சூளைமேடு பகுதியில் கடந்த ஜனவரி 25ம் தேதி கொக்கைன் விற்பனை செய்ததாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ராயப்பேட்டையை சேர்ந்த பயாஸ் அகமது (31), கோயம்பேடு பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (35) ஆகியோரை கைது செய்தனர்.
அவர்கள் அளித்த தகவலின்படி சென்னையில் கொக்கைன் விற்பனையில் ஈடுபட்டு வந்த மேலும் 14 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 60 கிராம் கொக்கைன், 1.7 கிலோ கஞ்சா, 2 கிராம் கஞ்சா ஆயில், 3 கிராம் ஓஜி கஞ்சா, 14 செல்போன்கள், 3 பைக், 3 கார்கள் பறிமுதல் செய்ப்பட்டன. பின்னர் கைது செய்யப்பட்ட 16 பேர் அளித்த தகவலின்படி, புருஷோத்தமன், ராஜ்குமார் ராஜூ மற்றம் நைஜீரியா நாட்டை சேர்ந்த 2 பேர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் கடந்த 4 மாதங்களாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான சென்னை வெட்டுவாங்கேணி பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த் (32) என்பவரை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சூளைமேடு போலீசார் உதவியுடன் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்த் மூலம் தான் சென்னை முழுவதும் கொக்கைன் விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் சென்னைக்கு கொக்கைன் விற்பனையில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த 2 நைஜீரியர்கள் உள்பட 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.