Friday, June 20, 2025
Home மருத்துவம்இயற்கை மருத்துவம் கைவைத்தியம் ஒன்றை கற்றுக்கொள்… கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்!

கைவைத்தியம் ஒன்றை கற்றுக்கொள்… கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்!

by kannappan

நோயற்ற வாழ்வுதான் நம் அனைவரின் ஆசையுமாக இருக்கிறது. ஆனால், எளிய பிரச்னைகள், உடல் உபாதைகள் இல்லாத வாழ்வு என்பதே எப்போதும் எக்காலத்திலும் இருந்ததில்லை. சின்ன சின்ன பிரச்னைகளுக்கு எல்லாம் அடித்துப்பிடித்து டாக்டரிடம் ஓடி, வரிசையில் காத்திருந்து, பர்ஸை பழுக்கவைத்துத் திரும்புகிறார்கள் சிலர். அலோபதி எனும் ஆங்கில மருத்துவம் அவசியம் நம் காலத்தின் தேவை. பெரிய பிரச்னைகளைக் கையாள்வதில் அலோபதியின் அளவுக்கு முதிர்ச்சியான, மேம்படுத்தப்பட்ட மருத்துவங்கள் நம் சமகாலத்தில் இல்லைதான். அதற்காக, சாதாரண சளிக்கும், ஒரு நாள் காய்ச்சலுக்கும் எல்லாம் மருத்துவரிடம் நடந்துகொண்டிருந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியே இல்லாமல் போய்விடும். இவற்றை எல்லாம் எளிய முறையில் தீர்ப்பதற்கான எத்தனையோ மருத்துவக் குறிப்புகள் சொத்தாக நமக்கு விட்டுச் சென்றுள்ளனர் நம் முன்னோர்கள். பாட்டி வைத்தியம், கை வைத்தியம், வீட்டு வைத்தியம் எனப் பலவிதமான பெயர்களால் வழங்கப்படும் இந்த எளிய வைத்திய முறைகளை அறிந்துவைத்திருப்பது நம் ஒவ்வொருவருக்குமே அவசியமான ஒன்று. பிரச்னை தொடக்க நிலையில் இருக்கும்போது இதை மேற்கொண்டாலே நோய் குணமாகும். தொடர்ந்து பிரச்னை; இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் அவசியம் மருத்துவரிடம் செல்ல வேண்டும். அவசரகாலத்துக்கான எளிய கைவைத்தியங்கள் இதோ…சளி, இருமல் – காய்ச்சல்சளி தொடக்க நிலையில் இருக்கும்போது நீலகிரித் தைலம் அல்லது விக்ஸ் போன்ற கை மருந்துகளைக் கொண்டு ஆவி பிடித்தாலே போதுமானது. நீலகிரித் தைலத்தை நெற்றி, மார்பு, முதுகு, தொண்டை ஆகிய பகுதிகளில் அழுத்தித் தேய்க்கும்போது சருமத்தின் வழியாக ஊடுருவி உடலில் உள்ள நஞ்சை முறித்து நிவாரணம் தரும். சளிக் காய்ச்சல் இருந்தால் வெந்நீரைக் குடிப்பது, கஞ்சி, ரசம் சோறு போன்ற நீராகாரங்களைப் பருகுவது, நெற்றியில் ஈரத்துணியால் பத்துபோட்டு உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவது ஆகியவற்றைச் செய்தாலே போதுமானது. மூக்கில் சளி ஒழுகுவது நின்ற பிறகு, தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். தூதுவளை லேகியம் அல்லது தூதுவளை பொறியல், ரசம் ஆகியவை சாப்பிட இருமல் கட்டுக்குள் வரும். வறட்டு இருமல்எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும். தூதுவளை லேகியமும் வறட்டு இருமலுக்கு மிகவும் ஏற்றது.தலைவலிதலைவலி சளி உட்பட பல்வேறு காரணங்களால் வரக்கூடும். ஒற்றைத் தலைவலிக்கும் பல காரணங்கள் உள்ளன. தற்காலிகமான நிவாரணத்துக்கு ஓர் எளிய கைவைத்தியம் உள்ளது. ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.தொண்டை கரகரப்பு மற்றும் தொண்டை வலிதொண்டை கரகரப்புக்கு சளி, தட்ப வெப்ப மாறுபாடு, புகையிலைப் பழக்கம் எனப் பல காரணங்கள் உள்ளன. வெந்நீரில் உப்பிட்டு அந்த நீர் தொண்டைப் பகுதியில் படும்படி வாய் கொப்பளித்தாலே தொண்டைக் கரகரப்பு கட்டுப்படும். தொண்டை வலிக்கும் இந்தக் கைவைத்தியம் உதவும். தொடர் கரகரப்பு இருந்தால், சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். தொண்டை வலிக்கும் சுக்கு, மிளகு, திப்பலி நல்ல கூட்டணி. எடுத்தவுடன் ஆண்டிபயாட்டிக் சாப்பிட்டு உடலைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம்.தொடர் விக்கல்தொண்டை உலர்வு, உதரவிதானப் பிரச்னை உட்பட சில காரணங்களால் சிலருக்கு தொடர் விக்கல் இருந்துவரும். நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.வாய் துர்நாற்றம்வயிற்றில், வாயில் புண் இருந்தால் வாய் துர்நாற்றம் ஏற்படும். துளசி, புதினா போன்றவற்றை மெல்வதன் மூலம் புண்ணும் குணமாகும். வாய் துர்நாற்றாமும் போகும். சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்துவந்தால் வாய் நாற்றம் போகும். அடிக்கடி நீர் பருகி வாயை உலர்ந்துபோகாமல் வைத்துக்கொள்ளவேண்டியதும் முக்கியம்.உதட்டு வெடிப்புபனிக்காலங்களில் உதட்டு வெடிப்பு ஒரு முக்கியப் பிரச்னை. தேங்காய் எண்ணெய் தடவுவது, வெண்ணெய் தடவுவது ஆகியவை இதற்கு நல்ல பலனைத் தரும். வாசலின் பயன்பாடும் சிறந்ததே. கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும். திரும்பவும் வரவும் செய்யாது.அஜீரணம்நேரத்துக்கு சாப்பிடாதது, நேரங் கெட்ட நேரத்தில் சாப்பிடுவது ஆகியவை அஜீரணத்தின் தோற்றுவாய்கள். நெஞ்சு எரிச்சல் இருந்தால் சூடாக ஒரு இஞ்சி டீ சாப்பிடலாம். இதைத் தவிர, ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடித்தாலும் அஜீரணம் சரியாகும்.குடல் புண்உணவு சமநிலையை இழப்பதே குடல் புண்ணுக்கு முக்கியக் காரணம். காரமான, அமிலம் நிறைந்த உணவுகளை உண்ணாமல் இருந்தாலே குடல்புண் கட்டுப்படும். மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும். வேப்பம் பூ, பாகற்காய் ஆகியவற்றைச் சாப்பிட்டாலும் குடல் புண் குணமாகும்.வாயுத் தொல்லைஉருளைக் கிழங்கு, பூண்டு போன்ற மண்ணுக்கு அடியில் விளையும் கார்போ நிறைந்த உணவுப் பொருட்களை அளவுக்கு அதிகமாக உண்ணும்போது வாய்வுத்தொல்லை ஏற்படுகிறது. நேரத்துக்கு உண்பது, கழிப்பறைக்குச் செல்வது ஆகிய வழக்கங்கள் இல்லாவிடிலும் வாய்வுத் தொல்லை உருவாகும். வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். இஞ்சியை உணவில் சேர்ப்பது வாயுத் தொல்லையைக் கட்டுப்படுத்த உதவும்.வயிற்று வலிவயிற்றில் புண் இருந்தாலே வலி உருவாகும். காரம், அமிலம் நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். வெந்தயத்தை நெய்யில் வறுத்துப் பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும். பால் ஒவ்வாமை இருப்பவர்கள் பழச்சாறுகளைப் பருகலாம். எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு போன்ற சிட்ரிக் நிறைந்த பழங்களை மட்டும் தவிர்த்திடுங்கள். கேரட், தர்பூசணி, வெள்ளரி ஆகியவற்றை ஜூஸாக்கிக் குடிக்கலாம்.மலச்சிக்கல்முதியவர்களுக்கு மலச் சிக்கல்தான் மிகப் பெரிய பிரச்னை. தினசரி ஆரோக்கியமான உணவை மட்டுமே உண்பது, அரை மணி நேரமாவது நடப்பது ஆகியவை மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தும். செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும். சீதபேதிமலை வாழைப்பழத்தை நல்லெண்ணெயில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும். செரிமானத்துக்கு சிரமமான உணவுகளைத் தவிர்த்தாலே இது ஓரளவு கட்டுப்படும்.பித்த வெடிப்புகால்களில் பித்த வெடிப்பு அதன் அழகையே கெடுப்பது. குறிப்பாக, அதிக நேரம் நீரில் கால்களை ஊறவைக்கும்படியாக பணி உள்ளவர்களுக்கும் துவைத்தல், வீடு கழுவுதல் போன்ற வேலைகளைச் செய்யும் பெண்களுக்கும் கால்களில் வெடிப்பு ஏற்படும். கண்டங்கத்திரி இலைசாற்றை ஆலிவ் எண்ணெயில் காய்ச்சி பூசிவந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.மூச்சுப் பிடிப்புசூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.சரும நோய்கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும். தோல் உலர்தல் முதல் சரும வெடிப்பு வரை பலவிதமான பிரச்னைகளும் இதனால் குணமாகும்.தேமல்வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும். மூலம்கரணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டுவர மூலம் குணமாகும். தினமும் அதிகாலை வெறும் வயிற்றில் கற்றாழையின் உட்புறம் இருக்கும் சோற்றை, மோருடன் கலந்து பருகுவதால் உடல் சூட்டினால் உருவான மூலம் கட்டுப்படும். துத்தி இலை மூலத்துக்குக் கண்கண்ட மருந்து. மாலை நான்கைந்து மணி போல மூன்று துத்தி இலைகளை ஒவ்வொன்றின் உள்ளும் ஒரு வெங்காயத்தை வைத்து நன்கு மென்று உண்டால் மூலம் உடனே கட்டுப்படும். துத்தி இலையை சிறிது பொறியல் அல்லது மசியல் செய்தும் சாப்பிடலாம். ;தீப்புண்வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும். தீக்காயம் பட்டவுடன் அந்த இடத்தில் கற்றாழையின் உட்புறம் இருக்கும் சோற்றைப் பூச நீர் கோர்த்து பொங்குவது கட்டுப்படும். புண்ணும் விரைவில் குணமாகும்.

மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும். தூதுவளை நெஞ்சுச் சலியை அறுத்து; மூக்கடைப்பை நீக்கவல்லது.பல் வலிசொத்தைப் பல்லினால் வலி ஏறபட்டாலோ ஈறுவீக்கம் இருந்தாலோ ஒரு சுண்டைக்காய் அளவுப் புளியை உப்பில் பிரட்டி அந்த இடத்தில் வைத்தால் வீக்கம் நீங்கும், வலி கட்டுப்படும். கிராம்பு எண்ணெய்க்கு பல் வலி உடனே கட்டுப்படும். மருந்துக் கடைகளில் கிராம்பு எண்ணெய் கிடைக்கும். ஒரே ஒரு சொட்டு விட்டாலும் போதுமானது.தலையில் நீர் கோர்த்தல்தலைக்கு குளித்ததும் சரியாகத் துவட்டாமல் விட்டால், நீர் அப்படியே தலையில் தங்கி விடுகிறது. இதனால் தலைபாரம். காது வலி ஏற்படுகிறது. தலைக்குக் குளித்த அன்று தலையை நன்றாகத் துவட்டுவது, வெயிலில் அதிகம் அலையாமல் இருப்பது நல்லது. மிளகை உணவில் சேர்க்கலாம். கோழி சூப் பருகலாம். ஆனால், தலையில் நீர் சேர்ந்திருப்பதால் ஏற்படும் ஜலதோசம் மிளகு சாப்பிட்டால் கட்டுக்குள் வருமே தவிர முழுமையான குணம் கிடைக்காது. இரண்டு சிறிய ஸ்பூன் அளவு மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன் அளவு சுண்ணாம்பு எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பூசுவதற்கு தகுந்தாற்போல் கலந்து மண்டையைச் சுற்றி நெற்றியிலும் மூக்கின் மேலும் இதை பூச வேண்டும். அவ்வாறு பூசினால் மண்டையில் இருக்கும் அத்தனை நீரையும் சுண்ணாம்பு எடுத்துவிடும்.பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும்செரிமானப் பிரச்னைகுழந்தை பிறந்த ஆறு மாதங்களுக்குத் தாய் பால் மட்டுமே கொடுக்க வேண்டும். பசும் பால் குடிக்க நேரும்போது சில குழந்தைகளுக்கு செரிமானப் பிரச்னை உருவாகவும் வாய்ப்பு உள்ளது. கடுக்காய், வசம்பை கொஞ்சம் உரைத்து பாலாடையில் கொடுத்தால் இது கொஞ்சம் கட்டுப்படும். அந்தக் காலத்தில் குழந்தைகளின் கைகளிலேயே கடுக்காய், வசம்பு இவற்றைக் கொண்ட காப்பினை கைகளில் அணிந்தனர்.; இதனால், செரிமானக் கோளாறு, சுறுசுறுப்பின்மை நீங்கி குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். குழந்தைகளின் உடல் சூட்டைத் தணிக்க காப்பரினால் ஆன காப்பு அணிவதும், இயற்கையாக வீட்டிலேயே செய்த கண்மையினை விளக்கெண்ணெய் கலந்து கண்கள், கன்னங்கள், பாதங்களில் இடுவதும் நல்ல சிகிச்சைதான்.முகப் பருஅதிக எண்ணெய் பிசுக்கு உள்ள சருமத்தினருக்குத்தான் முகப் பரு வரும். எனவே, உங்கள் சருமத்துக்கு ஏற்ற ஃபேஷ் வாஷ், சன் ஸ்க்ரீன் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டியது அவசியம். அதிக கொழுப்புள்ள, எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்க்கலாம். சந்தனம், வெள்ளரி, தயிர், தக்காளி, வாழைப்பழம் ஆகியவற்றைக் கொண்டு நேச்சுரல் ஃபேஸ் பேக் போடலாம். சினைப்பையில் நீர்க்கட்டிகள் இருந்தாலோ, முகத்தில் அழுக்கு சேர்ந்தாலோ ஹார்மோன்; சுரப்பிகள் சரியான அளவில் சுரக்காமல் இருந்தாலோகூட முகத்தில் நிறைய பருக்கள் வர வாய்ப்புள்ளன. எனவே, அவசியப்பட்டால் மருத்துவரைஅணுகுங்கள்.மாதவிலக்கு வலிமுருங்கை ஈர்க்கு இரண்டு கைப்பிடி அளவு எடுத்துத் தண்ணீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி, அதனுடன் வெங்காயம், சீரகம், மிளகு, நெய் கூட்டித் தேவையான உப்பும் சேர்த்து, சூப் செய்துபருகிவரலாம் இதனால் வயிற்றுவலி குறையும். முள்ளு முருங்கை இலையையும் கல்யாண முருங்கை இலையையும் மிக்சியில் போட்டு லேசாகத் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி சாப்பிட, வயிற்றுவலி குறையும்.முருங்கைக் கீரையுடன் சிறிது கறுப்பு எள் சேர்த்துக் கஷாயமாக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டால், வலி குறையும். உலர்ந்த புதினா இலையுடன் ஒரு ஸ்பூன் கறுப்பு எள் சேர்த்துக் கஷாயமாகச் செய்து சாப்பிட்டால், வலி குணமாகும்.; கொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் வலி குறையும். மாதவிலக்கு வந்த மூன்றாம் நாள் காலை மலைவேம்பு சாறு 1/2 கப் குடிக்கவும்.; சாதிக்காய், திப்பிலி, சீரகம் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்துப் பொடித்து, 1/4 ஸ்பூன் மோரில் கலந்து சாப்பிட பலன் கிடைக்கும். ஓமம், கிராம்பு இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடித்து, 1/4 ஸ்பூன் மோரில் கலந்து சாப்பிட பலன் கிடைக்கும். எள் விதையை அரைத்துக் கொட்டைப் பாக்கு அளவு எடுத்து நீரில் கலந்து சாப்பிடவும். ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாறுடன், சிறிது பெருங்காயம் சேர்த்து மோரில் கலந்து சாப்பிட, வலி குறையும். வாழைப் பழம், அன்னாசிப் பழம், பப்பாளிப் பழம், பசலைக் கீரை, ஓட்ஸ், கோதுமை, நட்ஸ் ஆகியவற்றை மாத விலக்கு நாட்களில் அதிகமாக உண்ணுங்கள். மாமிசம், பால், பாலாடைக்கட்டி, பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், எண்ணெய் ஆகியவற்றைத் தவிர்க்கலாம்.– இளங்கோ கிருஷ்ணன்

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi