ஈரோடு, செப். 2: ஈரோடு மாவட்ட பள்ளிக் கல்வித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கையெழுத்துப்போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. முதன்மைக் கல்வி அலுவலர் குழந்தைராஜன் தொடங்கி வைத்தார். இதில் 210 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான இப்போட்டியில் வலையபாளையம் அரசு உயர்நிலை பள்ளி மாணவி கிருபாசினி முதல் இடமும், பி.பி.அக்ரஹாரம் அரசு மேல்நிலை பள்ளி மாணவர் ஜெய்நிகேஷ் 2ம் இடமும், அம்மாப்பேட்டை டேலண்ட் மெட்ரிக் பள்ளி மாணவி ல்கஷனா 3ம் இடமும் பிடித்தனர்.
மேலும், 10 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான போட்டியில் ஈரோடு விவிசி ஆர். முருகேசனார் செங்குந்தர் மகளிர் மேல்நிலை பள்ளி மாணவி ஹேமலதா முதலிடமும், சிவகிரி அரசு மகளிர் மேல்நிலை பள்ளி மாணவி ஸன்மதி 2ம் இடமும், அறச்சலூர் அரசு மேல்நிலை பள்ளி மாணவி தர்ஷினி 3ம் இடமும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா வழங்கினார். நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சித் துணை இயக்குனர் ரெஜினாள்மேரி, முதுகலை தமிழ் ஆசிரியர் கந்தசாமி, பட்டதாரி ஆசிரியர் நாகராஜ், ஓவிய ஆசிரியர் சந்திரன் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.