Monday, May 29, 2023
Home » கைத்திறமையால் காசாகும் கழிவுப் பொருட்கள் வெளிநாடு செல்லும் பெண் கைவினை கலைஞர்களின் தயாரிப்புகள்: நெல்லை அருகே சத்தமின்றி சாதிக்கும் மகளிர்கள்

கைத்திறமையால் காசாகும் கழிவுப் பொருட்கள் வெளிநாடு செல்லும் பெண் கைவினை கலைஞர்களின் தயாரிப்புகள்: நெல்லை அருகே சத்தமின்றி சாதிக்கும் மகளிர்கள்

by kannappan

நெல்லை: நெல்லை அருகே தச்சு மற்றும் கைவினைக்கலையில் பெண்கள் ஈடுபட்டு பல்வேறு கலைநயப் பொருட்களை தயாரித்து அசத்துகின்றனர். சிரட்டை உள்ளிட்ட கழிவுப்பொருட்கள் இவர்களது கைத்திறமையால் ஆன்லைன் மூலம் உலகச் சந்தையில் பெறுகிறது. இலங்கை, இந்தியா போன்ற வெப்ப மண்டல  நிலப்பரப்புகளில் வளரும் சிறப்பான பயிர்களில் ஒன்று தென்னை ஆகும்.  தென்னையின் அனைத்து பகுதிகளும் பயன்மிக்கவை. தென்னை உலகில் 80-க்கும்  மேற்பட்ட நாடுகளில் வளர்க்கப்படுகிறது. இந்தோனேசியா, பிலிப்பைன்சு, இந்தியா  ஆகிய மூன்று நாடுகளே எப்போதும் முன்னணியில் இருந்து வருகின்றன.  இந்தியாவில் தமிழகம், கேரளா, கர்நாடகம் மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில்  தென்னை அதிகளவில் வளர்க்கப்படுகிறது. தேங்காயிலிருந்து கழிவுப் பொருளாக  பெறப்படும் சிரட்டைகள் பெரும்பாலும் குப்பைக்கே போகிறது. ஆனால் தற்போது  பல்வேறு தரப்பினரும் விரும்பும் கலை, அழகு சாதன, உணவுப்பொருள் பயன்பாட்டு  கருவிகளாக அவை மாற்றப்பட்டு சந்தைப்படுத்தப்படுகின்றன. மேலும் தேங்காய்  சிரட்டையை எரியூட்டி ‘ஆக்டிவேட் கார்பனும்’ பெருமளவு தயாரிக்கப்படுகிறது. தென்னையின் உப தொழில்களில் ஒன்றான  தேங்காய் சிரட்டை வர்த்தகத்தில், ஆண்டுக்கு குறைந்தபட்சம், 300 கோடி ரூபாய்  வரை வர்த்தகம் நடக்கிறது என்கின்றனர் இந்த வியாபாரத்தில்  ஈடுபட்டுள்ளவர்கள். தேங்காய் சிரட்டையில் செய்யும்  பொருட்களை 100, 120 டிகிரி செல்சியஸ் வரை வெப்பப்படுத்தினாலும் ஒன்றும்  ஆகாது. பயன்படுத்தி பழுதான இந்தப் பொருள்களைத் தூக்கிப் போட்டாலும்  பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை. இதைக் கழுவ சோப் தேவையில்லை, சாம்பல்,  தேங்காய் நாரில் சுத்தப்படுத்தலாம் என்பது இவற்றின் சிறப்பம்சம். பிளாஸ்டிக் தீமை பற்றிய விழிப்புணர்வால், இவ்வாறு தயார் செய்யப்படும் பொருட்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. சிறப்பு மிக்க தேங்காய் சிரட்டை மட்டுமின்றி தேவையற்ற கழிவுப் பொருட்களிலும் தங்கள் கைத்திறனை காட்டி சிறப்பு சேர்க்கின்றனர் நெல்லையைச் சேர்ந்த பெண்கள்.நெல்லை அருகே உள்ளது கொண்டாநகரம். இந்த சிறிய கிராமம் கலை ஆர்வம் மிக்க பெண்களால் மெல்ல உலக அளவில் புகழ் பெறத் தொடங்கியுள்ளது. இங்கு ‘பொருநை எக்கோ கிராப்ட்’ என்ற அமைப்பை சமீபத்தில் சிறிய அளவில் கிரிஜா என்ற பெண் தொடங்கினார். இங்கு சில பெண்கள் இணைந்து கைவினை கலைப்பொருட்களை தயாரிக்கும் பணியில் இறங்கினர். குறிப்பாக சிரட்டையில் இருந்து கரண்டி, குவளை, கீ செயின் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை கைகளாலேயே தயாரிக்கின்றனர். மேலும் மர வேலை செய்யும் இடங்களில் தேவையற்றதாக தூக்கி எறியப்படும் மரத்துண்டுகள், மரப்பலகைகளும் இவர்களது கைகளால்  கலை நயமிக்க பொருட்களாக மாற்றப்பட்டு காசாகிறது. மரத்துண்டுகளில் இருந்து கடைசல் செய்து சிறிய அழகிய பொம்கைளை வடிவமைக்கின்றனர். வாழை நார் கழிவுகளை கயிறு, கீச்செயின் போன்ற பல பொருட்களாக மாற்றி விடுகின்றனர். இவர்களது பொருட்கள் தயாரிப்புக்கு ‘பொருநை எக்கோ கிராப்ட்’ என பெயரிட்டுள்ளனர். இவர்களது தயாரிப்பு சிரட்டை குவளைக்கு மதுரையில் உள்ள பிரபல உணவகத்தில் இருந்து ஆர்டர்கள் வருகின்றன. அவர்கள் பருத்திப்பால் போன்ற நீர் ஆகாரங்களை இந்த சிரட்டை குவளையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றனர். மேலும் கோவை, சென்னை போன்ற பல இடங்களில் இருந்தும் இவர்களது தயாரிப்புகளை பெறுகின்றனர். நெல்லையிலும் மேடை போலீஸ் நிலைய கோட்டை அருகே அமைக்கப்பட்டுள்ள கிராப்ட் மையம் உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்களில் இவர்களின் தயாரிப்பு பொருட்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன. மேலும் ஆன்லைன் மூலம் இவர்களது கைவினை தயாரிப்பு பொருட்களுக்கு இந்திய அளவிலும், இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளிலும் வரவேற்பு கிடைக்கத் தொடங்கியுள்ளது.இதுகுறித்து இந்த தயாரிப்புகளை மேற்கொள்ளும் கிரிஜா கூறியதாவது: கொண்டாநகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான பெண் பீடித் தொழிலாளர்கள் உள்ளனர். மேலும் பலர் சுயஉதவிக்குழுவிலும் உள்ளனர். கிராமப்புற பெண்களுக்கு மாற்றுப் பணியை மேற்கொள்ளவும் அதிக வருவாய் ஈட்டும் வகையிலும் சுய தொழிலாக செய்ய இந்த கைவினை தயாரிப்பு கூடம் உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தொடங்கியுள்ளோம். தற்போது இங்கு பயிற்சி பெற்ற பெண்கள் சிறந்த பங்களிப்பை தருகின்றனர். மரக்கரண்டி, பொம்மைகள் உள்ளிட்டவைகளை இங்கு பயிற்சி பெற்றபின் பெண்களே தயாரிக்கின்றனர்.தென் தமிழக அளவில் முதல் முறையாக பெண் கைவினை கலைஞர்கள் நேரடியாக இப்பொருட்கள் தயாரிப்பில் ஈடுபடுகிறோம் என்பது பெருமையாக உள்ளது. எதிர்காலத்தில் மேலும் பல கைவினைப்பொருட்களை தயாரிக்கவும் அதிக பெண்களுக்கு பயிற்சி அளிக்கவும் திட்டமிட்டுள்ளோம். எதிர்காலத்தில் கொண்டாநகரம் சிறந்த கைவினை கிராமமாக பெயர் பெற முயற்சிக்கிறோம் என்றார்….

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi