ஆர்.கே.பேட்டை, ஆக. 17: பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை மற்றும் திருத்தணி ஆகிய ஒன்றியங்களில் வசிக்கும் மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக நெசவுத்தொழில் உள்ளது. இந்த பகுதியில் 73 கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் மூலம் நூல், பாவு பெற்று கைத்தறி நெசவாளர்கள் இலவச வேட்டி சேலை உற்பத்தி செய்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு குடும்பம் நடத்தி வருகின்றனர். இந்த பகுதியில், 24 ஆயிரம் பெடல் தறிகள் உள்ள நிலையில் சுமார் ஒரு லட்சம் நெசவாளர்கள் நூலுக்கு பசை போடுதல், சாயம், ஆலையில் பாவு வேலை, தறி இயக்குதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் கைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு இலவச வேட்டி சேலை உற்பத்திக்கு அனுமதி வழங்கப்படுகின்றது.
இதன் மூலம் நெசவாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். பொங்கல் தொடங்க 5 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் கடந்த 6 மாதங்களாக கைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு வேட்டி சேலை உற்பத்திக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது. இதனால் கைத்தறி நெசவாளர்கள் வேலை இழந்து அவர்களின் குடும்ப வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், கைத்தறி கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் ஆர்.கே.பேட்டையில் நேற்று நடந்தது. இந்த சங்கத்தின் தலைவர் ராஜா தலைமை வகித்தார். செயலாளர் கோவலன் முன்னிலை வகித்தார். பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். இந்த கூட்டத்தில் கைத்தறி கூட்டுறவு சங்க தலைவர்கள் 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஆலோசனையில் ஈடுபட்டனர்.
பொங்கல் நெறுங்கி வரும் நிலையில் உடனடியாக இலவச வேட்டி சேலை உற்பத்திக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. கோரிக்கைகள் வலியுறுத்தி விரைவில் திருத்தணியில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று முடிவும் செய்யப்பட்டது. கடந்த ஒர் ஆண்டாக திருவள்ளூர் மாவட்டத்தில் கைத்தறி துறை உதவி இயக்குநர் பணியிடம் நிரப்பாம, பொறுப்பு உதவி இயக்குநர் பணியாற்றி வருவதால், நெசவாளர்கள் பாதிக்கப்பட்டு அரசின் திட்டப் பணிகள் முடங்கியுள்ளதால், விரைந்து உதவி இயக்குநர் பணியிடம் நிரப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.