சென்னை, ஏப்.28: கே.கே.நகரில் டீ குடிக்க வந்த பிரபல ரவுடி ரமேஷை, 2 பேர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தனர். ரியல் எஸ்டேட் தொழில் போட்டியால் கொலை நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் முன்னிலையில் இந்த சம்பவம் நடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை கே.கே.நகர் அம்பேத்கர் குடிசை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (எ) முண்டகுட்டி ரமேஷ் (40). ‘ஏ’ கேட்டகிரி ரவுடியான இவர், மீது 2 கொலை, கொலை முயற்சி, அடிதடி என 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியான இவர், விருகை தொகுதி முன்னாள் அமைப்பாளராக இருந்துள்ளார்.
கே.கே.நகர் பாரதிதாசன் காலனி அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே உள்ள டீ கடை ஒன்றில் இவர் தினமும் டீ குடிப்பது வழக்கம். அதன்படி நேற்று காலை 7.50 மணிக்கு டீ குடிக்க ரவுடி ரமேஷ் வந்துள்ளார். அப்போது கார் ஒன்று வந்து டீக்கடை அருகே நின்றது. யாரும் எதிர்பார்க்காத வகையில் காரில் இருந்து இறங்கிய 2 பேர், அரிவாளுடன் ரவுடி ரமேஷை நோக்கி பாய்ந்தனர்.
இதை கவனித்த ரவுடி ரமேஷ், அவர்களிடம் இருந்து தப்பித்து ஓட முயன்றார். ஆனால் 2 பேர், ரமேஷை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். அப்ேபாது ரமேஷ் வெட்டு காயத்துடன் அவர்களிடம் இருந்து தப்பித்து சிறிது தூரம் ஓடியுள்ளார். ஆனாலும் அவரை விடாமல் துரத்தி சென்று வெட்டி சாய்த்தனர்.
பின்னர் எந்தவித பதற்றமும் இல்லாமல் 2 பேரும், அங்கிருந்து அவர்கள் வந்த காரில் தப்பினர். பலத்த வெட்டு காயமடைந்த ரமேஷ் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு நாலாபுறம் சிதறி ஓடினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. தகவலறிந்த எம்.ஜி.ஆர்.நகர் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து ரமேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை பெற்று, கொலையாளிகள் தப்பி சென்ற கார் பதிவு எண்ணை வைத்து அவர்களை தேடி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் ரியல் எஸ்டேட் தொழில் போட்டியில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இருந்தாலும் கே.கே.நகர் பகுதியில் ரவுடி ரமேஷ் குழுவுக்கும், மற்றொரு ரவடி குழுவுக்கும் இடையே யார் பெரிய ரவுடி மற்றும் மாமூல் வசூலிப்பதில் தொழில் போட்டி இருந்து வந்துள்ளது. இதனால் ரவுடி ரமேஷ் எதிர் குழுவை சேர்ந்த ரவுடி ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் இதுகுறித்து அறிந்த எதிர் தரப்பு ரவுடி கும்பல் ரமேஷை கொலை ெசய்துவிட்டதாக, கொலையான ரவுடி ரமேஷ் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இருந்தாலும், ரவுடி ரமேஷை கொலை செய்த நபர்களை கைது ெசய்தால் தான் எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து முழு விவரம் தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார், கொலையாளிகள் தப்பிச் சென்ற காரின் பதிவு எண் மற்றும் செல்போன் சிக்னல்களை வைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் அவரது ஆதரவாளர்கள் அதிகளவில் அந்த பகுதியில் திரண்டுள்ளனர். இதனால் கே.கே.நகரில் அசம்பாவிதங்களை தவிர்க்க அப்பகுதியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வடை, பாயாசத்துடன் விருந்து
அம்பேத்கர் பிறந்த நாளான கடந்த 14ம் தேதி ரவுடி ரமேஷ் ₹1 லட்சம் செலவு செய்து, அவர் வசிக்கும் பகுதியில் உள்ளவர்களுக்கு வடை, பாயாசத்துடன் விருந்து வைத்துள்ளார். ரமேஷ் குறித்து நன்றாக தெரிந்தவர்கள் தான் இந்த கொலையில் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கொலையான ரமேஷிற்கு 3 குழந்தைகள் ஒரு மனைவி உள்ளது குறிப்பிடத்தக்கது.