பொள்ளாச்சி, ஜூன் 18: பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டுக்கு ஒவ்வொரு ஆண்டும் மாம்பழம், தர்பூசணி, பலா பழம், அன்னாசி பழம் மற்றும் கரும்பு உள்ளிட்டவை சீசனை பொறுத்து விற்பனைக்காக மொத்தமாக கொண்டு வரப்படுகிறது. இந்த வருடம் துவக்கத்தில் இருந்து தர்பூசணி வரத்து அதிகமாக உள்ளது.
இதில், கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதியிலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் துவக்கத்தில் அன்னாசி பழம் வரத்து ஓரளவு இருந்தது. அதன்பின் கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பிருந்து இரண்டாவது கட்ட அறுவடை நடப்பதாக கூறப்படுகிறது. கேரள மாநிலம் மலப்புரம், கொழிச்சாம்பாறை, சாலக்குடி, அங்கேஷ்வரி, கொரடி, பாட்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அன்னாசி பழம் வரத்து அதிகரித்துள்ளது.
பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் குவிந்துள்ள அன்னாசி பழங்களை உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி உடுமலை, திருப்பூர், கோவை, பல்லடம், ஈரோடு மற்றும் வால்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வியாபாரிகள் விற்பனைக்காக வாங்கி செல்கின்றனர். இதனால், கேரள அன்னாசி பழத்துக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.
கடந்த, மே மாதம் துவக்கத்தில் ஒரு கிலோ அன்னாசி பழம் ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது, ஒரு கிலோ ரூ.35 முதல் அதிகபட்சமாக 50க்கு விற்பனை செய்யப்படுகிறது. அன்னாசி பழம் வரத்து அதிகமாக இருக்கும் வரை அதன் விலை சரியும் அதன்பின் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.