கண்டாச்சிபுரம், ஜூன் 24: கெடார் அருகே நள்ளிரவில் நகை கடையின் முன்பக்க ஷெட்டர் பூட்டை உடைத்து பழைய வெள்ளி கொலுசு அரை கிலோ கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கெடார் அடுத்த சூரப்பட்டு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயபால் மகன் தில்லை கோவிந்தன்(40). இவர் 3 வருடமாக சூரப்பட்டு திருவண்ணாமலை மெயின் ரோட்டில் சண்முகப்பிரியன் என்ற பெயரில் நகை அடகு கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு கடையை வழக்கம்போல் பூட்டி விட்டு சென்றுள்ளார்.
நள்ளிரவில் கடையின் எதிர் வீட்டினர் தொலைபேசி மூலம் தில்லை கோவிந்தனை தொடர்பு கொண்டு கடையில் இருந்து சத்தம் வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு தில்லை கோவிந்தன் மற்றும் தகவலறிந்த கெடார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது நகை கடையின் முன்பக்க ஷெட்டரை உடைத்து உள்ளே இருந்த சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஹார்ட்டிஸ்கை உடைத்து எடுத்துக்கொண்டு, கடையில் இருந்த பழைய வெள்ளி கொலுசுகள் அரை கிலோவை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
முன்னெச்சரிக்கையாக தங்க நகைகளை கடையில் வைக்காததால் கொள்ளை போகாமல் தப்பித்தது. தொடர்ந்து விக்கிரவாண்டி டிஎஸ்பி சரவணன் தலைமையிலான போலீசார் நேற்று காலை மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட நகை அடகு கடையை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து விழுப்புரம் எஸ்பி சரவணன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை கெடார் போலீசார் சேகரித்தனர். இதுகுறித்து கடையின் உரிமையாளர் தில்லைகோவிந்தன் கொடுத்த புகாரின் பேரில் கெடார் உதவி ஆய்வாளர் விஜயகுமார் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.