தேவதானப்பட்டி, மே 29: தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி பேரூராட்சியில் நேற்று நம்பிக்கையில்லா தீர்மானம் கூட்டம் நடைபெற்றது. தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி பேரூராட்சியில் சேர்மன் துணைச் சேர்மன் உள்பட 15 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 10 திமுக கவுன்சிலர்கள், ஒரு சுயேட்சை, ஒரு மதிமுக, 3 அதிமுக கவுன்சிலர்கள் உள்ளனர். சேர்மன் தமிழ்ச்செல்வி, துணைச் சேர்மன் ஞானமணி திமுகவைச் சேர்ந்தவர்கள். பேரூராட்சியில் சேர்மன் மற்றும் துணை சேர்மன் ஆகியோருக்கு இடையே உட்கட்சி பூசல் நிலவிவந்தது. இதனால் பேரூராட்சி பணிகளில் தொய்வு ஏற்பட்டு வந்தது. அடிக்கடி ஏற்பட்டு வந்த உட்கட்சி பூசல் முற்றி நேற்று பேரூராட்சியில் நம்பிக்கையில்லா தீர்மானம் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு செயல்அலுவலர் இளங்கோவன்(பொறுப்பு) தலைமை வகித்தார். நம்பிக்கையில்லா தீர்மானம் கூட்டத்திற்கு சேர்மன் தமிழ்ச்செல்வி மட்டும் வந்துள்ளார். கூட்டத்திற்கு மற்ற கவுன்சிலர்கள் வரவில்லை என கூறப்படுகிறது. மாலையில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி என செயல்அலுவலர் இளங்கோவன் அறிவித்தார். இதனால் கெங்குவார்பட்டி பேரூராட்சியில் நேற்று நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.