கெங்கவல்லி, ஜூலை 3: கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 5 மணியளவில், இடி மின்னலுடன் மழை பெய்தது. திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஆடிப்பட்ட சாகுபடிக்கு ஆயத்தமாகி வரும் நிலையில், இந்த மழை மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தனர்.
இதேபோல், வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் நேற்று பிற்பகல் பரவலாக மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவ- மாணவிகள் மற்றும் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய பொதுமக்கள் மழையில் நனைந்தவாறே சென்றனர். வெயிலின் தாக்கத்தால் அவதிக்குள்ளாகி வந்த மக்கள், திடீர் மழையால் மகிழ்ச்சியடைந்தனர்.