திருப்பூர், ஆக. 14: கூலி உயர்வு வழங்காததை கண்டித்து வருகிற 19ம் தேதி முதல் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்துவது என பனியன் தையல் நிலைய உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பனியன் தையல் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் மகாசபை கூட்டம் லட்சுமி நகரில் நேற்று மாலை நடந்தது. சங்க தலைவர் நந்தகோபால் தலைமை தாங்கினார். செயலாளர் முருகேசன் ஆண்டு அறிக்கையை வாசித்தார். பொருளாளர் சுந்தரம் வரவு செலவு சமர்ப்பித்தார்.
கூட்டத்தில் திருப்பூரில் சமீபத்தில் திறக்கப்பட்ட இ.எஸ்.ஐ. மருத்துவமனையை உடனடியாக அனைத்து நவீன கருவிகளுடன் சிறப்பு மருத்துவர்கள் உடனும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மின்சார கட்டணத்தில் சிறு விசைத்தறி உரிமையாளர்களுக்கு அளிக்கக்கூடிய மின்சார மானியம் போல் ஜாப் ஒர்க் செய்யக்கூடிய பவர் டேபிள் உரிமையாளர்கள் அனைவருக்கும் மின்சார மானியம் வழங்க வேண்டும்.
வரும் 19ம் தேதி முதல் 7 சதவீதம் கூலி உயர்வை அமல்படுத்தாத நிறுவனங்களில் டெலிவரி எடுப்பதையும், டெலிவரி கொடுப்பதையும் நிறுத்தி உற்பத்தி நிறுத்தப் போராட்டம் நடத்துவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் துணைத் தலைவர் நாகராஜன் நன்றி கூறினார்.