லால்குடி, ஆக.13: லால்குடியில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை சங்க லால்குடி கிளை சார்பில், கூலி உயர்வு கோரி நகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளைத் தலைவர் தினேஷ் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை சங்க புறநகர் மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம், சிஐடியூ செயலாளர் சிவராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் பாலமுருகன், கிளை செயலாளர் மகாமுனி மற்றும் மாதவி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் தினக்கூலி ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு அரசாணைப்படி தினக்கூலி 650 வழங்க வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.