Saturday, January 25, 2025
Home » கூலாக சந்திப்போம் சம்மரை

கூலாக சந்திப்போம் சம்மரை

by kannappan

நன்றி குங்குமம் தோழி வீட்டில் கூட இருக்க முடியாத அளவு வெயில் கொளுத்துகிறது. வெயிலின் அளவு அதிகரிக்க அதிகரிக்க நம் உடலின் வெப்பநிலையும் அதிகரிக்கும். அப்போது மூளையில் இருக்கும் ஹைப்போதலாமஸ் வியர்வையை சுரக்கச் செய்து, உடலின் வெப்பநிலையை உடலில் இருந்து வெளியேறச் செய்யும். அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் இன்னும் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. இதனால், ஹைப்போதலாமஸ் தன் செயல்பாட்டை இழந்து, உடல் வெப்பத்தை வெளியேற்ற முடியாமல் போகும். அந்நேரத்தில் தான் வியர்க்குரு, வேனிற்கட்டிகள், சிறுநீர்க்கடுப்பு என பல வெப்ப நோய்கள் ஏற்படுகிறது. எனவே இந்நேரத்தில் ஒருசில மாற்றங்களை தவறாமல் கடைபிடித்தால், வெப்ப நோய்களில் இருந்து விடுபடலாம் என்று கூல் சம்மர் டிப்ஸ் கொடுக்கிறார் உணவியல் நிபுணர் மீனாட்சி பஜாஜ்….பொதுவாக கோடைக்காலத்தில், உணவால் பரவும் நோய்த்தொற்றுக்கள், மலச்சிக்கல், எலக்ட்ரோலைட் சமநிலையின்மை போன்ற பிரச்னைகளால் மற்றவர்களைவிட,  குழந்தைகளும், முதியவர்களும்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதற்குக் காரணம் போதிய தண்ணீர் அருந்தாமல் இருப்பது. இன்றைய குழந்தைகள் கோடைக்கால வகுப்புகள், நீச்சல் வகுப்பு, கிரிக்கெட் கோச்சிங் என வெளியில் செல்வது அதிகமாக உள்ளது. பகலில் விளையாடச் செல்லும் குழந்தைகளுக்கு அதிகமாக வியர்வை வெளியேறுகிறது. அதை  ஈடு செய்யும் வகையில் நீர் அருந்தவில்லை எனில், உடலிலுள்ள நீர்ச்சத்து குறைந்து விடும். அதனால் எப்போதும் குடிக்கும் நீரின் அளவைவிட, அரை லிட்டர் தண்ணீர் அதிகமாக குடிக்கச் சொல்ல வேண்டும். நீச்சல் பயிலும் குழந்தைகளுக்கு வியர்வை அதிகமாக வெளியேறும் என்பதால் அவர்களுக்கு சோடியம் இழப்பு ஏற்படும். அதனால் தலைவலி, தலைசுற்றல் வரும். அதைத்தவிர்க்க, எலுமிச்சைசாறு, உப்பு கலந்த நீரை வாட்டர் பாட்டிலில் உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.கோடைக்காலத்தில், குழந்தைகளுக்கு  சாதாரணமாக ஏற்படுகிற நீர்ச்சத்து பற்றாக்குறை தொடங்கி கண் எரிச்சல், அம்மை, கொப்புளங்கள் போன்றவற்றால் குழந்தைகள் அவதிப்படாமல் பாதுகாப்பதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். வெயிலின் தாக்கத்தால் குழந்தைகளுக்கு கொப்புளம், கட்டி போன்றவை ஏற்படும். எனவே, காலை 11 மணியில் இருந்து மதியம் 3 மணிவரை விளையாடவோ, வெளியே செல்லவோ அனுமதிக்கக் கூடாது. கோடையில் குழந்தை களை நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க அவர்களுக்கு என்னென்ன பழங்கள் கொடுத்தால் நன்மை தரும் என்பதை பற்றி பார்ப்போம்.ரத்தத்தில் இருக்கும் சிவப்பு ரத்த அணுக்களை அதிகரிக்கும் சக்தி மாதுளம் பழத்திற்கு உண்டு. இது, குழந்தைகளின் இதய ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தவும் உதவுகிறது.  கோடைக்காலத்தில் தர்பூசணியை குழந்தைகளுக்கு பழச்சாறாக தராமல், பழமாகவே சாப்பிட கொடுக்கலாம். ஏனெனில், உடலில் நீர் வற்றிப்போகாமல் இருக்கப் பெரிதும் உதவும்.கோடைக்காலத்தில் குழந்தைகளுக்கு உடல்சூடு காரணமாக, வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புண்டு. இதனை தடுக்கும் சக்தி கொண்டது, சப்போட்டா பழம். இது ரத்த ஓட்டத்தையும் சீராக்கும். பெரிய நெல்லிக்காயை குழந்தைகளுக்கு அப்படியே கொடுத்தால் சாப்பிடமாட்டார்கள். அதனால் சிறிது உப்பு, மஞ்சள் கலந்து வேகவைத்துக் கொடுப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.வெயில் காலத்தில் பச்சை, கருப்பு, உலர்ந்த திராட்சை என எல்லா வகை திராட்சைகளையும் குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுக்கலாம். இது வெயில் காலத்தில் குழந்தைகளை எளிதில் சோர்வடைய விடாமல் பாதுகாக்கும். கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் பி சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இது குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரண கோளாறுகளை நீக்க வல்லது. உடல் வளர்ச்சிக்கும், எலும்புகள் பலம் அடைவதற்கும் உதவுகிறது.வெயில்கால மதிய வேளைகளில் ஒரு டம்ளர் தண்ணீரில் ஒன்று அல்லது இரண்டு துளி எலுமிச்சை சாற்றை உப்பு கலந்து தருவது நன்மை தரும்.சாத்துக்குடியில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இது குழந்தைகளின் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். பல், ஈறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.கோடைக்காலத்தில் முலாம் பழத்தை துண்டுகளாக்கி சர்க்கரை கலந்து கொடுத்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இது உடல்சூட்டையும் குழந்தைகளுக்கு ஏற்படும் சருமப் பிரச்சனையை தடுக்கும்.கோடைக்காலத்தில் குளிர்ச்சியை தரக்கூடிய பழங்களான வெள்ளரி, முலாம்பழம் போன்றவை குழந்தைகளுக்கு வயிற்றில் ஏற்படும் சூட்டைத் தணித்து, உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கும். காய்களில், நீர்ச்சத்து அதிகமுள்ள சுரைக்காய், பூசணிக்காய், வெள்ளரிக்காய், சௌசௌ போன்ற காய்களை உணவில் அதிக அளவில் சேர்க்க வேண்டும்.இயற்கை நமக்களித்த நீர்பானங்களான,  இளநீர், பதநீர், மோர், பழச்சாறு, நுங்கு போன்றவை கொடுக்க வேண்டும். அதிலும் குறிப்பாக மோரில் சிறிதளவு உப்பு சேர்த்து கொடுக்க வேண்டும். மோர், உடலில் உள்ள நீர்ச்சத்தின் அளவை சமப்படுத்தும்.குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறைவதை எவ்வாறு கண்டறியலாம். வறண்ட சருமம், உதடு வெடிப்பு, சிறுநீர் கழிப்பது மிகக் குறைந்த அளவே காணப்படும். சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வலி ஏற்படும். இந்த நேரத்தில்தான் மலச்சிக்கல் பிரச்னையும் வரும். மலம் கழிக்க மிகவும் சிரமப்படுவார்கள். குழந்தைகளின் எடையில் ஒரு கிலோவிற்கு குறைந்தபட்சம் 30 மிலி தண்ணீர் குடிக்க வேண்டும்.குழந்தைகள் மட்டும் இல்லை, பெரியவர்களும் கவனமாக இருக்க வேண்டும். மனித உடலின் வெப்பநிலை சாதாரணமாக 98.4 டிகிரி பாரன்ஹீட். ஆனால் வெயில் அதிகம் அடிக்கும் போது, உடலின் வெப்பநிலை 106 டிகிரியாக உயர்ந்து, அதனால் உடல் சோர்வு, அதிகப்படியான தண்ணீர் தாகம், மயக்கம், தலைச்சுற்றல் போன்றவை ஏற்படுவதோடு, சோடியம், பொட்டாசியம், மற்றும் மக்னீசியம் போன்ற உப்புக்கள் வெளியேறி, உடல் சோர்ந்துவிடுகிறது. இதற்கு வெப்ப தளர்ச்சி என்று பெயர். வெயிலில் அதிகம் சுற்றுபவர்களுக்கும், வெயிலில் வேலை செய்பவர்களும் மயங்கி விழுவார்கள். இதற்கு காரணம் ரத்த நாளங்கள் விரிவடைந்து, இடுப்பிற்கு கீழே ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதயத்தில் ரத்த அழுத்தம், மூளைக்கு செல்ல வேண்டிய ரத்தத்தின் அளவு குறைந்து, அதனால் மயக்கம் ஏற்படுகிறது. இந்த நிலை ஏற்பட்டால், உடனே பாதிக்கப்பட்டவரை காற்றோட்டமுள்ள இடத்தில் வைத்து, ஆடையை தளர்த்தி, குளிர்ந்த நீரில் நனைத்த துணியால் உடலை ஒற்றி எடுக்க வேண்டும். பெரியவர்களுக்கு, கோடையில் போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்பது, வியர்வை அதிகம் வெளியேறுவது போன்றவற்றால், உடலில் நீர்ச்சத்து குறைந்து, சிறுநீர் வெளியேறும் அளவும் குறையும். அப்போது சாதாரணமாக காரத்தன்மையுடன் இருக்கும் சிறுநீர் அமிலத்தன்மைக்கு மாறி, அதன் விளைவாக சிறுநீர்க்கடுப்பு ஏற்படும். மேலும் சிறுநீர் வழியாக வெளியேற வேண்டிய உப்புக்கள் சிறுநீர்ப்பாதையில் படிந்து, சிறுநீரக கல்லாகிவிடும். அதேபோல், கோடையில் வியர்வை அதிகம் வெளியேறுவதால், வியர்க்குரு ஏற்படும். இத்தகைய. வியர்க்குருவைத் தவிர்க்க தினமும் இரண்டு முறை குளிக்க வேண்டும். வாயு நிரப்பப்பட்ட பானங்களை குடிப்பதற்கு பதிலாக, இளநீர், மோர், சர்பத், பதநீர் போன்றவற்றை குடித்து வந்தால், கோடையில் வியர்வையின் மூலம் உடலில் இருந்து வெளியேறிய சோடியம், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற தாதுஉப்புக்கள் கிடைத்து, சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு உடலின் வெப்பநிலையைப் பராமரிக்கும். கோடையில் எலுமிச்சை சாற்றில் சர்க்கரை அல்லது உப்பு கலந்து குடித்து வந்தால், நீரிழப்பால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் உடனடியாக குறையும்.கோடையில் கிடைக்கும் பழங்களான தர்பூசணி, வெள்ளரிக்காய், திராட்சை, கொய்யா, பப்பாளி, கிர்ணிப் பழம், நுங்கு போன்றவற்றை தவறாமல் வாங்கி சாப்பிட வேண்டும். இதனால் உடலில் நீர்ச்சத்து பராமரிக்கப்படும். நீரிழிவு பிரச்சனை உள்ளவர்கள் மாம்பழத்தை மிதமான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இவை எல்லாவற்றையும் விட, கோடையில் கம்மங்கூழ், தயிர் சாதம், மோர் சாதம், இட்லி, இடியாப்பம், கீரைகள், வாழைத்தண்டு, புடலங்காய், கேரட், பீட்ரூட் போன்றவற்றை உட்கொண்டு வந்தால், உடலின் வெப்பநிலை குறையும்.கோடைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்குழந்தைகள், பெரியவர்கள் அனைவருமே கோழி இறைச்சி, சிப்ஸ், எண்ணெயில் பொரித்த உணவுகள், காரமான உணவுகள், பன் மற்றும் சப்பாத்தி, பிஸ்கட் போன்ற மாவுப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும். சாலட், பழச்சாறுகள், பானிபூரி போன்ற சமைக்காத உணவுகளை வெளியில் வாங்கி சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள். குறிப்பாக கோடைக்காலத்தில் வயிறு நிரம்ப சாப்பிடாதீர்கள். மிகவும் லைட்டாக உணவு எடுத்துக் கொள்ளுங்கள். டீ,காபி அருந்துவதை அறவே தவிர்த்துவிடலாம். அவை உடலின் நீர்ச்சத்தை மேலும் குறைத்து விடும். அதற்கு பதில் துளசி டீ, லெமன் டீ போன்றவற்றை குடிக்கலாம்.செயற்கை பானங்களான பாட்டிலில் அடைக்கப்பட்ட பானங்களைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் அமிலம் மற்றும் வாயு அதிக அளவு உள்ளதால் குழந்தைகளுக்கு இதைக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஐஸ்க்ரீம், சில்லென்ற பழச்சாறுகள், ஃப்ரிட்ஜ் தண்ணீரை குடிக்க வேண்டாம். இவற்றை குடிப்பதால் உடல் குளிர்ச்சி அடையும் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். சளி, தொண்டைப்புண்ணை ஏற்படுத்துமே தவிர, உடல் சூட்டைத் தணிக்காது. அதற்கு பதில், கொதித்து ஆறவைத்த நீரை மண்பானையில் நிரப்பி குடிக்க வேண்டும். வெளியில் வெயிலில் அலைந்துவிட்டு வந்தவுடன் ஃப்ரிட்ஜிலிருந்து தண்ணீரை அப்படியே குடிப்பதோ, ஏசியை ஆன் செய்து உட்காருவதோ மிகவும் தவறான செயல். அதிக சூட்டிலிருந்து, அதிக குளிர்ச்சியை  உடல் ஏற்றுக் கொள்ளாது. சாதாரண அறை வெப்பநிலைக்கு உடல் சூட்டை கொண்டு வந்து பின்னர் ஏசியை ஆன் செய்யலாம். முதியவர்களில், இதய செயலிழப்பு, சிறுநீரக செயலிழப்பு, கல்லீரல் செயலிழப்பு போன்ற உறுப்பு செயலிழப்பு உள்ள நோயாளிகளுக்கு கோடைக்காலம் சற்று சவாலானதாகத்தான் இருக்கும்.  இவர்கள் போதிய நீர் அருந்தாவிட்டால் மிக ஆபத்தான நிலைக்கு ஆளாவார்கள். மேற்சொன்ன வழிமுறைகளை கடைபிடித்தாலே கோடையை கூலாக சமாளித்துவிடலாம்.உணவியல் நிபுணர் நித்யா நடராஜன், கோடையில் குளர்ச்சி தரும் இளநீர், அகர் அகர் போன்ற பொருட்களை வைத்து குழந்தைகள் விரும்பும் தேங்காய் புட்டிங் செய்முறையை இங்கே விவரிக்கிறார்…தேங்காய் புட்டிங்தேவையான பொருட்கள்மில்க் மெய்ட் – 400 கிராம் (1 டின்)மில்க் க்ரீம் – 250 மிலிபால் – 1 கப் (கொழுப்பு நீக்கப்படாத) தேங்காய்ப் பால் – 1 கப் (முதல் பால்)சைனா கிராஸ் (அ) அகர்அகர் – 5-10 கிராம்தண்ணீர் – 1 கப் (கரைப்பதற்கு)இளநீர் வழுக்கை – 1 கப் (பொடியாக நறுக்கியது)நட்ஸ் (பாதாம்) – பொடியாக நறுக்கியது (தோல் சீவியது)செய்முறை முதலில் சைனாகிராஸ் செய்முறை பார்ப்போம்.ஒரு பாத்திரத்தில் சைனா கிராஸ் (அகர்அகர்) போட்டு அதில் 1 கப் தண்ணீர் விட்டு 10 நிமிடம் வைக்கவும். பின் அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிதமான தீயில் கரைக்கவும் (இதை வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.) மற்றொரு பாத்திரத்தில், மில்க் மெய்ட், பால் மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து, முட்டை விஸ்கர் கொண்டு நன்கு கலக்கவும். பின் இதை அடுப்பில் ஏற்றி சிறிது சூடு படுத்தி இறக்கி வைக்கவும். பின், மேலே உள்ள இரண்டு கலவையையும் கலந்து அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள இளநீர் வழுக்கையை கலக்க வேண்டும். இதை சின்னச்சின்ன கப்களில் ஊற்றி 4-5 மணி நேரம் வைத்து, குளிர்ச்சியாக பரிமாறவும். சுவையான, இந்த தேங்காய் புட்டிங் கோடைக்காலத்திற்கேற்றது என்பதால் பெரியவர்கள், சிறியவர்கள் எல்லோரும் சாப்பிடலாம்.– மகாலட்சுமி

You may also like

Leave a Comment

2 × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi