திருவில்லிபுத்தூர், மே 5: திருவில்லிபுத்தூர் அருகே கோழி கூண்டுக்குள் புகுந்து அடையில் இருந்த முட்டைகளை விழுங்கிய நல்ல பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது. திருவில்லிபுத்தூர் அருகே உள்ளது கீழகோடாங்கிபட்டி. இப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீட்டில் கோழி மற்றும் ஆடுகளை வளர்த்து வருகிறார். இரவு நேரங்களில் கோழிகள் கூண்டுகளில் தங்குவது வழக்கம். அதில் ஒரு கோழி தற்போது எட்டு முட்டைகளுடன் கூண்டுக்குள் அடைகாத்து வந்துள்ளது. நேற்று சுமார் 6 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு ஒன்று கோழி கூண்டுக்குள் புகுந்தது. கூண்டுக்குள் பாம்பு வருவதை பார்த்த கோழி தப்பி ஓடியது. இதனை தொடர்ந்து அடையிலிருந்த சுமார் நான்கு மூட்டைகளை பாம்பு விழுங்கியது.
இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் திருவில்லிபுத்தூர் தீயணைப்பு துறை அதிகாரி அந்தோணிக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கோழி கூண்டுக்குள் இருந்த பாம்பை உயிருடன் பிடித்து திருவில்லிபுத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைக்க கொண்டு சென்றனர். அப்போது பாம்பு ஒரு முட்டையை வெளியேற்றியது. இதை பார்த்த தீயணைப்பு துறையினர் அதிர்ச்சி அடைந்து பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்துவிட்டு வந்தனர். கோழி கூண்டுக்குள் புகுந்து நான்கு முட்டையை நல்ல பாம்பு விழுங்கியதால் கீழ கோடாங்கிபட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.