ஊட்டி,ஆக.23: கரிமொராஹட்டியில் உலா வரும் கரடியை பிடிக்க கூண்டு வைத்த போதிலும், அதில் சிக்காமல் போக்கு காட்டி வருகிறது. குன்னூர் அருகேயுள்ள கரிமொராஹட்டி கிராமம் உள்ளது.இந்தப் பகுதியில் தேயிலை தோட்டங்களும், விவசாய நிலங்களும் அதிகமாக உள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் தற்போது கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாள் அப்பகுதிக்கு வரும் கரடி அங்குள்ள விளை நிலங்கள் மற்றும் கிராமத்திற்குள் வந்து அட்டகாசம் செய்கிறது. இதனால், இப்பகுதி மக்கள் மாலை நேரங்களில் வெளியில் செல்லவே அச்சப்படுகின்றனர்.
ஊருக்குள் வரும் கரடியை பிடிக்க வனத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இப்பகுதியில் வலம் வரும் கரடியை பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டது. ஆனால், சில சமயங்களில் பகல் நேரங்களிலேயே வரும் இந்த கரடி கூண்டிற்குள் சிக்காமல் போக்கு காட்டி வருகிறது. இதனால், இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் தேயிலை தோட்டத்திற்கு செல்லவே அச்சப்படுகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ,மாணவிகளும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். எனவே, கூடுதலாக இப்பகுதியில் கூண்டுகள் வைத்து இந்த கரடியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.