விழுப்புரம், அக். 28: விழுப்புரம் அருகே சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 3 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. விழுப்புரம் அருகே கெடார் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி. இவர் கடந்த 2020ம் ஆண்டு மே 23ம் தேதி பாத்ரூம் செல்வதற்காக தோட்டத்து பக்கம் சென்றுள்ளார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த நாகேஷ் மகன் விக்னேஷ்(25), முருகையன் மகன் சுபாஷ்(24), பழனிவேல் மகன் சுபாஷ்(26) ஆகிய 3 பேரும் தனியாக வந்த சிறுமியை வழிமறித்து நிறுத்தியுள்ளனர். மேலும் அருகில் உள்ள காரில் சிறுமிக்காக சுடிதார் புதிதாக எடுத்து வைத்துள்ளதாகவும், எனவே காருக்கு வருமாறு சிறுமியிடம் தெரிவித்துள்ளனர். சிறுமி மறுத்துவிட்டு அங்கிருந்து சென்ற போது அவர்கள் சிறுமியை வலுக்கட்டாயமாக காருக்குள் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதனை சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார். இது குறித்த அவர்கள் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விக்னேஷ் உள்ளிட்ட மூன்று பேர் மீதும் போக்சோ உள்ளிட்ட பிரிவின்கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி ஹெர்மிஸ் நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கும் சாகும் வரை சிறைதண்டனையும், தலா ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.5 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டுமென தீர்ப்பு வழங்கினார். தொடர்ந்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறையில் அடைக்கப்பட்டனர்.