வருசநாடு, ஆக.28: கடமலை மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட முத்தாலம்பாறை கிராமத்தில் கூட்டு குடிநீர் மோட்டார் பழுதடைந்து கிடப்பதால் குடிநீரின்றி பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். முத்தாலம்பாறை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு மயிலாடும்பாறை மூல வைகை ஆற்றில் உறை கிணறு அமைத்து கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு, குடிநீர் மோட்டார் பழுதடைந்து விட்டது. இதனால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீருக்காக பொதுமக்கள் தனியார் தோட்டங்களுக்கு சென்று மணிக்கணக்கில் காத்துக் கிடந்து குடிநீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகையால் குடிநீர் மோட்டாரை சரி செய்து முத்தலாம்பாறை கிராமத்திற்கு குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்க ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.