தேனி, மே 20: ஆண்டிபட்டியில் உள்ள கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தேனி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார். தேனி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : ஆண்டிபட்டி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயபயிற்சி நடந்து வருகிறது. இப்பயிற்சியில் சேர பிளஸ் 2 தேர்ச்சி அல்லது எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சியுடன் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இப்படிப்பிற்கு 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. விண்ணப்பங்களை ஜூன் 20ம் தேதி வரை www.tncu.gov.tn.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இணைய வழியாக அல்லாமல் நேரடியாகவோ அல்லது தபால் மூலமோ மற்றும் கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு விண்ணப்பித்திருந்தால் அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. பயிற்சி வகுப்புகள் தமிழில் மட்டுமே பயிற்றுவிக்கப்படும்.
பயிற்சிக்கான தேர்வுகளை தமிழில் மட்டுமே எழுத வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.100ஐ இணையவழியாக செலுத்த வேண்டும். பயிற்சிக்கட்டணம் ரூ.20 ஆயிரத்து 850ஐ ஒரே தவணையில் பே டிஎம் மூலம் செலுத்த வேண்டும். இது குறித்த விபரங்களை ஆண்டிபட்டியில் உள்ள தேனி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நேரிலோ அல்லது 04546 244465 அல்லது 9629869957 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தேனி மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.