புதுக்கோட்டை, மார்ச் 12: புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள கூட்டுறவு சங்க பணியாளர் குறைதீர் கூட்டத்தில் சங்க பணியாளர்கள் விண்ணப்பம் வழங்க அறிவிப்பு வௌியீட்டு உள்ளனர். கூட்டுறவுத்துறை அமைச்சர் சட்டப்பேரவையில், கூட்டுறவு சங்க பணியாளர்களின் கோரிக்கைகளை தீர்வு செய்திடும் விதமாக இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மண்டல அளவில் பணியாளர் நாள் நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவிப்பு வௌியீடப்பட்டது.
இதனை தொடர்ந்து, புதுக்கோட்டை மண்டலத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நிறுவன பணியாளர்களுக்கான ஐந்தாவது பணியாளர் நாள் நிகழ்ச்சி வரும், 14ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.புதுக்கோட்டை மண்டல இணைப்பதிவாளர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
பணியாளர் நாள் நிகழ்வில் புதுக்கோட்டை மண்டல கூட்டுறவு நிறுவனங்களில் தற்போது பணிபுரியும் மற்றும் ஓய்வு பெற்று பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பணியாளர்கள் தங்கள் குறைகள் தொடர்பான விண்ணப்பங்களை மண்டல இணைப்பதிவாளர் அவர்களிடம் நேரில் வழங்கலாம். மேலும், பெறப்படும் கோரிக்கை விண்ணப்பங்கள் உரிய சட்ட விதிகளுக்கு உட்பட்டு, அரசாணை மற்றும் பதிவாளர் கடிதங்கள், சுற்றறிக்கைக்கு உட்பட்டு உடன் தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என புதுக்கோட்டை மண்டல இணைப்பதிவாளர் ஜீவா தெரிவித்துள்ளார்.