சேலம், அக்.4: சேலத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை மூடி பணியாளர்கள் தொடர் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் 4,300 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும், 150 நகர கூட்டுறவு கடன் சங்கங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த சங்கங்களில் பயிர், நகை, கால்நடைகள் வளர்ப்பு கடன் என பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கூட்டுறவு சங்கங்களில் பல்நோக்கு சேவை மையம், உள்கட்டமைப்பு நிதி திட்டத்தினை செயல்படுத்த வேண்டும் என உத்தரவிடப் பட்டுள்ளது. ஏற்கனவே பெரும்பாலான சங்கங்கள் நஷ்டத்தில் இயங்கும் நிலையில் இந்த திட்டங்களால் கூட்டுறவு சங்கங்கள் மேலும் நலிவடையும் என்பதால் இந்த திட்டத்தை கைவிடக்கோரி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர், அலுவலகங்களை பூட்டி இணை பதிவாளரிடம் சாவியை கொடுத்துவிட்டு தொடர் விடுப்பில் செல்லும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டம் நேற்று முதல் தொடங்கியது.
அதன்படி நேற்று முதல் சேலம் மாவட்டத்தில் உள்ள 203 கூட்டுறவு சங்கங்கள், 5 நகர கூட்டுறவு சங்கம், 5 மலைவாழ்வு பல்நோக்கு சங்கம் என 215 கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் 200 பெண்கள் உள்பட ஆயிரம் பேர் தொடர் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சங்க அலுவலகங்களை பூட்டி சாவியை கூட்டுறவு சங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்து வருகின்றனர்.
இதனிடையே சேலம் கலெக்டர் அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் குமார் தலைமையில் மாவட்ட செயலாளர் ராஜமாணிக்கம், மாவட்ட இணைச் செயலாளர்கள் தமிழ்செல்வி, இதயசெல்வன், போராட்டக்குழு தலைவர் அய்யம்பெருமாள், மாவட்ட பொருளாளர் இருசப்பமுருகன் உள்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் சங்க அலுவலகத்தின் சாவிகளை சேலம் மண்டல இணைபதிவாளரிடம் ஒப்படைக்கச் சென்றனர். இதுபற்றி நிர்வாகிகள் கூறுகையில், இந்த போராட்டத்தினால் விவசாய கடன், நகைக்கடன், உரம் மற்றும் பூச்சி மருந்துகள் வினியோகம் பாதிக்கப்படும். அரசு எங்கள் கோரிக்கையை ஏற்கும் வரை போராட்டம் தொடரும். அடுத்த போராட்டம் குறித்து மாநில தலைமை முடிவு செய்யும், என்றனர்.