சேலம், ஜூன் 3: கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன், கால்நடை பராமரிப்பு கடன், மகளிர் சுய உதவிக்குழுக்கள் கடன், மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மற்றும் குறைந்த வட்டியில் சுயஉதவிக்குழு கடன், நகைக்கடன், மத்திய காலக்கடன், பண்ணை சாராக்கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன் போன்ற 17 வகையான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் 2025-2026ம் ஆண்டிற்கான பொதுமக்களிடம் இருந்து, டெபாசிட் சேகரித்தலுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம், பொதுமக்களிடம் இருந்து ரூ.20ஆயிரம் கோடி டெபாசிட் சேகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார், அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளார். அதில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் இட்டு வைப்புகள் சேகரித்தலுக்கு 2025-2026ம் ஆண்டிற்கு மண்டல வாரியாக குறியீடுகள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தேவையான சிறப்பு முகாம்கள் நடத்தி, குறியீடு இலக்கு எய்தப்படுவதை மண்டல இணை பதிவாளர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மூலம், ரூ.20ஆயிரம் கோடி வைப்புகள் சேகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில், சேலம் மாவட்டத்திற்கு ரூ.2445 கோடியும், நாமக்கல்லுக்கு ரூ.1513 கோடியும் வைப்புகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மேலும், தர்மபுரி மாவட்டத்திற்கு ரூ.483 கோடியும், கிருஷ்ணகிரிக்கு ரூ.197 கோடியும் என மொத்தம் ரூ.4,638 கோடி வைப்பு தொகை சேகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.