கூடுவாஞ்சேரி, மே 28: தேசிய நெடுஞ்சாலை துறையின் அலட்சியப்போக்கால் கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் புழுதி பறக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையான பெருங்களத்தூரில் இருந்து செங்கல்பட்டு வரை 8 வழி சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதில் ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, வல்லாஞ்சேரி ஆகிய ஆகிய பகுதிகளில் சரி வர 8 வழி சாலை மற்றும் சர்வீஸ் சாலை அமைக்காமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இந்நிலையில், மேற்படி பகுதிகளில் சாலை குண்டும் குழியுமாக காட்சியளித்து வந்தது. இதனை சீரமைக்க கோரி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதன்பேரில் ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி மற்றும் வல்லாஞ்சேரி ஆகிய பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் ராட்சத மிஷன் மூலம் ஜிஎஸ்டி சாலையை சுரண்டி அதில் வரும் கழிவுகளை லாரிகள் மூலம் ஏற்றி அனுப்பி வைத்து வருகின்றனர். ஆனால் சாலையில் சிதறிய கழிவுகளை சரிவர அகற்றாததால் புழுதி நிறைந்த சாலையாக காட்சியளிக்கிறது.
இதில் பைக், ஆட்டோ, கார், வேன், பஸ் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் செல்லும் மக்கள் மீது புழுதி படர்வதால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதில் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் சிலர் அதில் வழுக்கி விழுந்து எழுந்து செல்கின்றனர். இதனால் பெரும் விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தலையிட்டு புதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.