வல்லம், ஜூன் 24: தஞ்சை அருகே அமைந்துள்ளது 8 நம்பர் கரம்பை, வண்ணாரப்பேட்டை, சிவகாமிபுரம் ஆகிய கிராமங்கள். இங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தஞ்சாவூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயில்கின்றனர். மேலும் இப்பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் கூலி வேலைக்கு தஞ்சாவூருக்கு தான் வருகின்றனர். இதனால் காலையில் இப்பகுதிக்கு வரும் பஸ்சில் அளவுக்கு அதிகமான நெரிசல் காணப்படுகிறது.
தஞ்சை பழைய பஸ்ஸ்டாண்டிலிருந்து வண்ணாரப்பேட்டைக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் காலை நேரத்தில் மாணவ, மாணவிகள் ஏற முடியாத அளவிற்கு மக்கள் நெரிசல் அதிகம் உள்ளது. இதனால் பஸ்சில் மாணவ, மாணவிகள் படிக்கட்டில் தொங்கிக் கொண்டே செல்கின்றனர்.
இதனால் விபத்து ஏற்படுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்த பகுதிக்கு காலை மற்றும் மாலை வேலையில் பள்ளி மாணவர்களுக்காக கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ் இயக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று இந்த கோரிக்கையை வலியுறுத்தி 8 நம்பர் கரம்பை பைபாஸ் சாலையில் வண்ணாரப்பேட்டை, 8 நம்பர் கரம்பை, சிவகாமிபுரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து வல்லம் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்க விரைந்து சாலைமறியல் நடத்திய பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து சாலைமறியல் விலக்கி கொள்ளப்பட்டது. இதனால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.