கரூர், ஆக. 13: கரூரில் நடைபெற்ற பூசாரிகள் நலச்சங்கத்தின் கரூர் மாவட்ட மாநாட்டில் வயது முதிர்ந்த பூசாரிகளுக்கு ஓய்வூதியத் தொகையை ரூ. 5 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில தலைவர் வாசு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சந்திரசசேகர், துணை செயலாளர் சிவா, பொருளாளர் குணசேகர், மண்டல தலைவர் குழந்தைவேல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மாவட்ட செயலாளர் சந்திரசேகர் நன்றி கூறினார்.
இந்த மாநாட்டில், ஒரு கால பூஜை வங்கி வைப்பு நிதி இரண்டரை லட்சமாக உயர்த்தியதற்கும், பூசாரியின் குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி பயில ஆண்டுக்கு ரூ. 10 ஆயிரம் நிதி உதவி வழங்கியும், 17 ஆயிரம் கோயில்களில் பணியாற்றும் பூசாரிகளுக்கு மாதம் ஊக்கத்தொகை ரூ. 1000ம் வழங்கியும், ஒரு கால பூஜை நடைபெறாத கோயில்களை கண்டறிந்து புதிதாக ஆயிரம் கோயில்களுக்கு ரூ. 25 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வர் மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோர்களுக்கு பூசாரிகள் நல சங்கத்தின் சார்பாக மாநாட்டின் வாயிலாக நன்றி தெரிவித்துக் கொள்வது.
ஒரு கால பூஜை நடைபெறும் கோயில்களில் பணியாற்றும் பூசாரிகளுக்கு ஊக்கத்தொகையை உய ர்த்த வேண்டும். வயது முதிர்ந்த பூசாரிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ரூ. 4 ஆயிரம் மாத ஓய்வூதியத் தொகையை ரூ. 5 ஆயிரமாக உயர்த்த வேண்டும், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒரு காலபூஜை நடைபெறும் கோயில்களில் பணியாற்றும் பூசாரிகளுக்கு மாவட்ட அறநிலையத்துறை மூலம் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.