புதுச்சேரி, ஜன. 4: புதுவையில் அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறி தலைமை செயலகம் அருகே கட்டண கழிப்பிட ஊழியரை முற்றுகையிட்டு சுற்றுலா பயணிகள், வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரிக்கு நாளுக்குநாள் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகின்றன. குறிப்பாக விடுமுறை தினங்களில் மற்றும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர்களின் வசதிக்காக நகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் கட்டண கழிப்பிடங்கள் செயல்படுகிறது. கடற்கரை சாலையில் டூப்ளே சிலை மற்றும் தலைமை செயலகம் அருகே நகராட்சி கட்டண கழிப்பிடம் செயல்படுகிறது. கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி பொதுமக்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
கட்டணமாக ரூ.5, ரூ.10 மற்றும் ரூ.20 என வசூலிக்கப்படுகிறது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி அதிகளவில் வெளிமாநில சுற்றுலா பயணிகள் கடற்கரை அழகை ரசிக்க பீச்சிற்கு வந்த நிலையில், அங்குள்ள கழிப்பிடங்களுக்கு சென்றபோது கூடுதல் கட்டணம் வசூலித்ததாக புகார் எழுந்தன. அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்ததாக தெரிகிறது. இதனிடையே நேற்று தலைமை செயலகம் அருகிலுள்ள கட்டண கழிப்பிடத்துக்கு தமிழகத்தில் இருந்து வந்திருந்த ஆன்மீக சுற்றுலா பயணிகள் சென்றனர்.
அப்போது சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குளிக்க, பாத்ரூம் செல்ல அங்கிருந்த பணியாளர் கூடுதல் கட்டணம் (சராசரியாக ரூ.30) கேட்டதாக கூறப்படுகிறது. கட்டணம் தொடர்பான விபரத்தை கேட்டபோது, உரிய விளக்கத்தை கொடுக்காமல் இதுதான் கட்டணம் என்று அங்கிருந்த ஊழியர் கூறியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சுற்றுலா பயணிகள், அங்கிருந்த ஊழியரை முற்றுகையிட்டு சரமாரி கேள்வி எழுப்பினர். தகவலறிந்த பெரியகடை போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி ஊழியரை கண்டித்தனர். இதுபோன்று கூடுதல் கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வலுத்து வருகிறது.