மதுரை, நவ. 11: தமிழக போக்குவரத்து கமிஷனர் சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில் பண்டிகை கால சிறப்பு வாகன தணிக்கை நடந்து வருகிறது. இந்தநிலையில், மதுரை சரக இணை போக்குவரத்து கமிஷனர் சத்தியநாராயணன் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கார்த்திகேயன் (செயலாக்கம்), சிங்காரவேலு (தெற்கு), சித்ரா(மத்தி, வடக்கு) ஆகியோருடன், மதுரையில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர்களும் சிறப்பு வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் தொடங்கிய இந்த வாகன தணிக்கையானது, வரும் 14ம் தேதி காலை வரை நடைபெறுகிறது.
இதில் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் உள்ளிட்ட விதி மீறல்கள் குறித்தும், உரிய ஆவணங்கள் இன்றி பஸ்கள் இயக்குவது குறித்தும் சோதனை செய்யப்படுகிறது. அவ்வாறு வாகனங்கள் விதி மீறி இயக்கப்பட்டால், அபராதம் விதிக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும், பண்டிகை காலத்தையொட்டி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால், அது குறித்து தமிழக அரசின் கட்டணமில்லா தொலை பேசிஎண் 93848 08393க்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.